இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.புனேவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு விராட் கோலி, கே.எல் ராகுல், ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், ஷிகர் தவான் (67), ரிஷப் பண்ட் (78) மற்றும் ஹர்திக் பாண்டியா (64) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணி 329 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.
இதனையடுத்து330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான ஜேசன் ராய் 14 ரன்களிலும், பாரிஸ்டோ 1 ரன்னிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.அனைத்து பந்துவீச்சாளர்களையும் சாம் கர்ரான் அசால்டாக சமாளித்ததன் மூலம் கடைசி ஒரு ஓவருக்கு 14 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்டது. போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி ஓவரை வீசிய தமிழக வீரர் நடராஜன் தனது துல்லியமான யார்கர் மூலம் அந்த ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்ததன் மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. தனி ஒருவனாக போராடி இந்திய அணிக்கு மரண பயத்தை காட்டிய சாம் கர்ரான் 83 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் குவித்து இறுதி வரை விக்கெட்டை இழக்காமல் இருந்தார்.இது குறித்து சாம் கர்ரான் பேசுகையில், "இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெறவில்லை, இருந்தாலும் நான் விளையாடிய விதம் எனக்கு பிடித்திருந்தது.
வெற்றி பெறுவது எனக்கு மிகவும் பிடிக்கும், இந்த போட்டியில் எனக்கு கிடைத்துள்ள அனுபவம் மிகப்பெரியது. நீண்ட நாட்களாக இங்கிலாந்து அணிக்காக நான் இது போன்ற ஒரு விளையாட்டை வெளிப்படுத்தவில்லை, ஆனால் இறுதியில் நாங்கள் தோல்வியடைந்துள்ளோம். பந்துகளை தடுத்து விளையாடுவதே மிகுந்த சிரமமாக இருந்தது. நடராஜன் மிக சிறப்பாக பந்துவீசினார். இக்கட்டான கடைசி நேரத்தில் அவர் எவ்வளவு சிறந்த பந்துவீச்சாளர் என்பதை நிரூபித்துவிட்டார். புவனேஷ்வர் குமாரும் மிக அருமையாக பந்துவீசினார். நிறைய விசயங்களை இந்த தொடரின் மூலம் கற்று கொண்டேன், ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி காத்துள்ளேன்" என்றார்.