14வது ஐபிஎல் டி.20 தொடரின் 2வதுபோட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்துமுதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி (0), டூபிளசிஸ் (0), ருத்துராஜ் கெய்க்வாட் (5) போன்ற முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மொய்ன் அலி 36 ரன்களும், சுரேஷ் ரெய்னா 54 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய சாம் கர்ரான் 34 ரன்களும் எடுத்து கை கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 188 ரன்கள் எடுத்தது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒட்டுமொத்த வியூகங்களையும் உடைத்தெறிந்து மளமளவென ரன் குவித்த டெல்லி அணியின் துவக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கே 138 ரன்கள் குவித்தனர்.
ப்ரித்வி ஷா 38 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரியுடன் 72 ரன்களும், ஷிகர் தவான் 54 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 14 ரன்களும், ரிஷப் பண்ட் 15* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 18.4 ஓவரிலேயே இலக்கை அசால்டாக எட்டிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றது.இந்தநிலையில், இந்த போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம், சென்னை அணியின் சின்ன தல சுரேஷ் ரெய்னா புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் அரங்கில் தனது 39வது அரைசதத்தை பதிவு செய்த சுரேஷ் ரெய்னா, இதன்மூலம் ரெய்னா ஐ.பி.எல். போட்டியில் அதிக அரைசதம் அடித்த வீரர்களில் 3-வது இடத்தில் இருந்த விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரை சமன் செய்தார். விராட் கோலி 185 இன்னிங்சிலும், ரோகித் சர்மா 196 இன்னிங்சிலும் தலா 39 அரைசதம் அடித்துள்ளனர்.ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களில் ரெய்னா தற்போது 2-ம் இடத்தில் உள்ளார். அவர் விராட் கோலிக்கு அடுத்தபடியாக 5,422 ரன் எடுத்துள்ளார். விராட் கோலி 5,911 ரன்னுடன் முதல் இடத்தில் உள்ளார்.