14வது ஐபிஎல் சீசனின் 21வது லீக் போட்டி நேற்று (ஏப்.26) அஹமதாபாத் மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி பிவர்பிளே முடிவில் 1 விக்கெட் இழந்து 37 ரன்கள் குவித்தது.
பவர்பிளேவில் விக்கெட் இழந்து கே எல் ராகுல் 19 ரன்கள் மட்டும் அடித்திருந்தார். அதன்பிறகு களமிறங்கிய கெயில் (0), தீபக் ஹூடா(1) வந்த வேகத்தில் மீண்டும் பெவிலியன் திரும்பினார்கள்.தொடக்க வீரர் மயங்க் அகர்வால் பார்ட்னர்ஷிப் கிடைக்காமல் நிதானமாக விளையாடி வந்தார். இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 123 ரன்கள் குவித்தது. பஞ்சாப் சார்பாக மயங்க் அகர்வால் 31 மற்றும் கிறிஸ் ஜார்டன் 30 குவித்ததே அதிகபட்சமாக இருக்கிறது. கொல்கத்தா பவுலர்கள் பிரஷித் கிருஷ்ணா 3 மற்றும் பாட் கம்மின்ஸ், சுனில் நரேன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்கள்.
இதையடுத்து 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தாவுக்கு தொடக்க வீரர்கள் கில் (9) மற்றும் ராணா (0) முதல் இரண்டு ஓவர்களிலே விக்கெட் இழந்து ஏமாற்றம் கொடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய சுனில் நரேனும் டக் அவுட்டாக திரிபாதி மற்றும் மோர்கன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.41 ரன்கள் அடித்த திரிபாதி ஷாருக்கானிடம் கேட்ச் கொடுத்து விக்கெட் இழந்தார். இதன்பிறகு மோர்கன் 47 ரன்கள் அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார். 16.4 ஓவர்கள் முடிவில் 126 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது கொல்கத்தா. பஞ்சாப் பவுலர்கள் ஹீடா, ஷமி, அர்ஷதீப் சிங்,மோயிசஸ் தலா 1 விக்கெட் எடுத்து இருக்கிறார்கள். இதன்மூலம் புள்ளி பட்டியலில் கொல்கத்தா கடைசி இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.