இந்தியாவில் முதல் முறை.. பழங்குடியினருக்கான விளையாட்டு திருவிழா.. பிரதமர் பாராட்டு!
முதலாவது பழங்குடியின விளையாட்டுத் திருவிழாவின் முன்முயற்சிக்கு பிரதமர் பாராட்டு.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு தரப்பு மக்களுக்கு விளையாட்டு போட்டிகளை நடத்துவது உண்டு. குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகள், மூன்றாம் பால் இனத்தவருக்கான போட்டிகள் என பல்வேறு போட்டிகளை நடத்துவார்கள். ஆனால் ஒடிசாவில் தற்போது வித்தியாசமான முறையில் இந்தியாவில் முதல் முறையாக பழங்குடியினருக்கான விளையாட்டுப் போட்டிகளை அங்குள்ள அரசாங்கம் ஏற்பாடு செய்து இருக்கிறது.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா சமூக அறிவியல் நிறுவனத்தில் முதலாவது பழங்குடியின விளையாட்டுத் திருவிழா நடத்தப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த முயற்சியை மிகப்பெரிய தொடக்கம் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், நாட்டிற்கு பெருமை சேர்ப்பதில் பழங்குடியின விளையாட்டு வீரர்களின் பங்களிப்பைப் பாராட்டினார்.
அமிர்தப் பெருவிழாவின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து அவர் கூறியதாவது, “நமது விளையாட்டுத் துறையில் இது ஒரு மிகப்பெரிய துவக்கம்! சர்வதேச போட்டிகளில் இந்தியா அங்கீகாரம் பெறுவதில் பழங்குடியின வீரர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். இத்தகைய முயற்சிகளால் இந்த பிரிவைச் சேர்ந்த ஏராளமான திறமையானவர்கள் நாட்டிற்குக் கிடைப்பார்கள்" என்று கூறி தனது பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்.
Input & Image courtesy: News