இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் தகுந்த பதிலடி கொடுத்த ரோஹித் ஷர்மா!
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் தகுந்த பதிலடி கொடுத்த ரோஹித் ஷர்மா!
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி, இந்திய அணியை மிக இலகுவாக வீழ்த்தி அபார வெற்றி பெற்றதால், இந்திய அணி இந்த தொடரில் ஒரு போட்டி வெல்வதே மிக கடினம் என எதிர்பார்க்கப்பட்டது.இதில் குறிப்பாக முதல் போட்டி நடைபெற்ற அதே சேப்பாக்கம் மைதானத்திலேயே இரண்டாவது போட்டியும் நடைபெற்றதால், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணியே வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முன்னாள் வீரர்கள் பலரின் கணிப்புகளை தவிடு பொடியாக்கிய இந்திய அணி,இரண்டாவது போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்தது.இந்த தொடர் துவங்கும் முன், இந்திய அணியால் ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாது என கணித்திருந்த முன்னாள் வீரர்கள் பலர், தங்களது கணிப்பை நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காக இரண்டாவது போட்டி நடைபெற்ற பிட்சின் மீது பழியை போட்டனர். இரண்டாவது போட்டி நடைபெற்ற பிட்ச் முழுக்க முழுக்க இந்திய அணிக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்ததாகவும், இதனால் தான் இந்திய அணி வெற்றி பெற்றது என்றும் மைக்கெல் வாகன் போன்ற முன்னாள் வீரர்கள் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்தநிலையில், இரண்டாவது போட்டி நடைபெற்ற ஆடுகளத்தை விமர்சித்தவர்களுக்கு இந்திய அணியின் துணை கேப்டனான ரோஹித் சர்மா தற்போது சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து ரோஹித் சர்மா பேசுகையில், “நாங்களும் அதே பிட்சில் தான் விளையாடினோம். இரு அணிகளுக்குமே ஒரு பிட்ச் தான் என்றபோது, ஏன் இதை பற்றி எல்லாம் அதிகம் பேசி வருகின்றனர் என்று எனக்கு புரியவில்லை. பல வருடங்களாகவே இதே போன்று தான் இந்தியாவில் இருக்கும் பிட்ச்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சொந்த மண்ணில் விளையாடும் போது அனைத்து அணிகளுக்கும் நிறைய விசயங்கள் சாதகமாக இருக்கும். நாங்கள் விக்கெட்டை இழந்தால், எதிரணியிலும் விக்கெட் விழத்தான் செய்யும், எங்களை பற்றி அவர்கள் கவலை கொள்ளாத போது, நாங்கள் மட்டும் ஏன் அவர்களுக்காக யோசிக்க வேண்டும். சொந்த மண்ணில் விளையாடினால் அந்த அணிக்கு கூடுதல் பலமாக தான் இருக்கும், இது கூடாது என்றால் ஐசிசியிடம் சொல்லி விதிமுறைகளை மாற்ற சொல்லுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.