திரும்ப வந்துட்டேனு சொல்லு ! லார்ட்ஸ் டெஸ்டில் சதம் விளாசிய ராகுல் !

KL Rahul slams a very good Century in Lords.

Update: 2021-08-13 03:00 GMT

லண்டன்: லார்ட்ஸ் டெஸ்டில் சதம் விளாசினார் ராகுல். முதல் இன்னிங்சில் சிறப்பான துவக்கம் கண்ட இந்திய அணி, வலுவான ரன்குவிப்பை நோக்கி முன்னேறுகிறது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மழை காரணமாக 'டிரா' ஆனது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று துவங்கியது. மழை காரணமாக 30 நிமிடம் தாமதமாக போட்டி துவங்கியது. வானம் மேகமூட்டமாக காணப்பட 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், பீல்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் காயமடைந்த ஷர்துல் தாகூருக்குப் பதில் இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டார். அஷ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை. இங்கிலாந்து அணியில் கிராலே, லாரன்ஸ், ஸ்டூவர்ட் பிராட்டுக்குப் பதில் ஹசீப் ஹமீது, மொயீன் அலி, மார்க் உட் சேர்க்கப்பட்டனர்.

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி வலுவான துவக்கம் கொடுத்தது. மழை காரணமாக ஆடுகளத்தில் ஈரப்பதம் காணப்பட, இந்திய அணியின் 'டாப் ஆர்டரை' எப்படியும் தகர்த்து விடலாம் என எதிர்பார்த்து பவுலிங் தேர்வு செய்த ஜோ ரூட்டின் இங்கிலாந்து அணியினருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. 

ஆண்டர்சன், ராபின்சன், சாம் கர்ரான் பந்துகளை இந்திய ஜோடி கவனமாக எதிர்கொண்டது. முதல் 12 ஓவரில் 14 ரன் மட்டும் எடுத்தது. கர்ரான் வீசிய 12.5 வது ஓவரில் இப்போட்டியின் முதல் பவுண்டரியை ரோகித் அடித்தார்.

இதன் பின் திடீரென 'வேகம்' எடுத்த ரோகித், சர்மா, கர்ரான் வீசிய போட்டியில் 15வது ஓவரில் 4 பவுண்டரிகள் அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார். இந்திய அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 46 ரன் எடுத்த போது, லேசான மழை குறுக்கிட போட்டி நிறுத்தப்பட்டது. மீண்டும் துவங்கியதும், ரோகித் டெஸ்ட் அரங்கில் 13வது அரைசதம் அடித்தார். தொடர்ந்து மார்க் உட் வீசிய பந்தை சிக்சருக்கு அனுப்பினார். லார்ட்ஸ் டெஸ்டில் சேவக்கிற்கு (2002) பின் சிக்சர் அடித்த துவக்க வீரர் ஆனார் ரோகித்.

இவர் 83 ரன் எடுத்து, ஆண்டர்சன் பந்தில் போல்டானார். புஜாரா (9) வழக்கம் போல விரைவில் வெளியேறினார். சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த ராகுல் டெஸ்ட் அரங்கில் 6வது சதம் எட்டினார். இங்கிலாந்துக்கு எதிராக இவர் அடித்த 3வது சதம் இது. மறுபக்கம் கோஹ்லி 42 ரன்னில் அவுட்டானார். முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 276 ரன் எடுத்திருந்தது. ரகானே (1), ராகுல் (127) அவுட்டாகாமல் இருந்தனர்.

Dinamalar


Tags:    

Similar News