கொல்கத்தா அணியை விட்டு குல்திப் யாதவ் விலக வேண்டும்.. முன்னாள் வீரர் அதிரடி கருத்து.!

கொல்கத்தா அணியை விட்டு குல்திப் யாதவ் விலக வேண்டும்.. முன்னாள் வீரர் அதிரடி கருத்து.!

Update: 2021-01-16 13:09 GMT

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இன்று துவங்கியது.

இந்திய அணியின் சீனியர் பந்துவீச்சாளர்கள் பலர் காயமடைந்துள்ளதால் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக ஜடேஜாவிற்கு பதிலாக குல்தீப் யாதவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கலாம் என்றும், பும்ராஹ்விற்கு பதிலாக நடராஜனுக்கு இடம் கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. நடராஜன், வாசிங்டன் சுந்தர் போன்ற இளம் வீரர்களுக்கு நான்காவது போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைத்திருந்தாலும், குல்தீப் யாதவுக்கு இடம் கிடைக்காதது முன்னாள் வீரர்கள் பலருக்கு அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்படாதது குறித்து முன்னாள் வீரர்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “குல்தீப் யாதவ் ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடாத ஒரே காரணத்தால் தான் இந்திய அணியிலும் இடம்பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார். தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவருக்கான வாய்ப்பை சரியாக வழங்குவது இல்லை. இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க வேண்டுமென்றால் அதற்கு குல்தீப் யாதவ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து முதலில் விலக வேண்டும். அல்லது அந்த அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். வாய்ப்பே கிடைக்காமல் வெளியில் அமர்வதால் எந்த நன்மையும் ஏற்பட்டுவிடாது. இது அவரது திறமையை மட்டுமே குறைக்கும். அவரை நினைத்து வருத்தப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Similar News