3 விக்கெட்டுகள் எடுத்த நடராஜன்.. முதல் ஆட்டத்தில் வெற்றிப்பெற்ற இந்திய அணி.!

3 விக்கெட்டுகள் எடுத்த நடராஜன்.. முதல் ஆட்டத்தில் வெற்றிப்பெற்ற இந்திய அணி.!

Update: 2020-12-04 20:25 GMT

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டர் கான்பொராவில் இன்று நடைபெற்றது.


டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜா 23 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்தார். ராகுல் 51 ரன்கள் எடுத்தார். ஜடேஜாவின் அதிரடியால் இந்திய அணி கடைசி 5 ஓவர்களில் 64 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹென்ரிகஸ் 3 விக்கெட்டுகளும் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.


ஜடேஜா பேட்டிங் செய்தபோது ஹெல்மெட்டில் பந்து பட்டது. இதனையடுத்து அவரை மருத்துவக்குழு பரிசோதனை செய்தது. இதனைதொடர்ந்து மாற்று வீரராக சஹால் தேர்வானார். ஜடேஜாவுக்குப் பதிலாக மாற்று வீரராக சஹால் களமிறங்கியதற்கு ஆஸ்திரேலிய அணி எதிர்ப்பு தெரிவித்தது.


ஆஸி அணிக்கு ஃபிஞ்சும் ஷார்ட்டும் சிறப்பாக தொடக்கத்தை அளித்தனர். முதல் 6 ஓவர்களில் 53 ரன்கள் எடுத்தார்கள். இதன்பின்னர் 26 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த ஃபிஞ்ச், சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு ஆஸி தடுமாறியது. சஞ்சு சாம்சனின் அற்புதமான கேட்ச்சால் சஹால் பந்துவீச்சில் 12 ரன்களில் ஸ்மித் ஆட்டமிழந்தார். முக்கியமான இரண்டு பேட்ஸ்மேன்கள் வெளியேறியதால் இந்திய அணியினர் உற்சாகம் அடைந்தனர்.


மேக்ஸ்வெல்லை எல்பிடபிள்யூ முறையில் 2 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார் நடராஜன். டி 20யில் இது அவருடைய முதல் விக்கெட்டாகும். 34 ரன்கள் எடுத்த ஷார்ட் நடராஜன் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் வரிசையாக விக்கெட்டுகள் விழுந்தது. சஹால் 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர், 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டும் கொடுத்து அசத்தினார்.


ஆஸி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. இதனால் முதல் டி20 ஆட்டத்தை 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணி நடராஜன், சஹால் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர். இவர்கள் இருவரும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News