கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்கள் மற்றும் நினைவிடங்களை மறு உத்தரவு வரும் வரை மூடுமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் தஞ்சை பெரிய கோவிலில் நடைபெறவிருக்கும் சித்திரை திருவிழா நடக்குமா என்று பக்தர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் அடங்கி என்று பெருமூச்சு விடுவதற்குள் இந்தியாவிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. நோய் தொற்று பரவாமல் இருப்பதற்காக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வார இறுதி நாட்களில் ஊரடங்கு மற்றும் நோய்த் தொற்று அதிகமாக இருக்கும் பகுதிகளில் மட்டும் ஊரடங்கு போன்ற அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது.
தற்போது தொல்லியல் துறை தங்களின் கட்டுபாட்டில் இருக்கும் கோவில்கள் மற்றும் நினைவிடங்களை மறு உத்தரவு வரும்வரை மூடுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் சுமார் 3,686 கோவில்கள்,நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மூடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தஞ்சை பெரிய கோவிலில் இந்த வருடம் நடைபெற இருக்கும் சித்திரை திருவிழா நடைபெறுமா என்ற சந்தேகம் பக்தர்கள் இடையே எழுந்து உள்ளது.
கடந்த வாரம் சித்திரை திருவிழாவிற்காக கொடியேற்றம் நடைபெற்றது. இந்தக் குடியேற்றம் நிகழ்வின் போது பக்தர்கள் நோய்தொற்று முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடித்து கொடியேற்ற விழாவில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக கோவில் மூடப்படும் என்றும் சித்திரை திருவிழா பெரிய கோவிலில் நடைபெறாது என்று செய்தி தஞ்சையில் காட்டுத் தீயைப் போல் பரவி வருகிறது.