தொடர்ந்து கொல்லப்படும் இந்துக்கள் - ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கவனிக்குமா?
பாகிஸ்தானில் இந்துக்கள் கொல்லப்படும் சம்பவம் தொடர்கதையாகி வரும் நிலையில் மேலும் ஒரு சம்பவம் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நடந்துள்ளது. சங்கர்லால் என்ற ஒரு இந்து தொழிலதிபர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் தொழில் அதிபராக இருந்து வருபவர் சங்கர் லால். இவர் வசித்து வந்த பகுதியில் உணவு தானியங்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அந்த பகுதியைச் சேர்ந்த அகமத் என்பவருக்கும் நிலப் பிரச்சினை தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் சங்கர்லால் வழக்கம்போல் தனது அலுவலகம் இருக்கும் சந்தைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை சுற்றி வளைத்த மர்ம நபர்கள் 3 பேர் துப்பாக்கியால் சங்கர்லாலை சுட்டனர். அவர் மீது மூன்று தோட்டாக்கள் சீறிப் பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதனால் சுட்டுக் கொன்ற மர்ம நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவரது உறவினர்கள் அவர் உடலை வாங்காமல் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிறகு இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்ததை தொடர்ந்து சங்கர்லால் உடலை அவரது உறவினர்கள் வாங்கி சென்றனர்.
தொடர்ந்து இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வரும் நிலையில் மேலும் ஒரு உயிரிழப்பு சம்பவம் சிந்து மாகாணத்தில் நடைபெற்றுள்ளது. இது அந்த பகுதியில் வசிக்கும் சிறுபான்மையினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் கடந்த மாதமும் இதே பகுதியைச் சேர்ந்த 31 வயது மிக்க அஜய் லால்வானி என்ற பத்திரிகையாளர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சிந்து மாகாணத்தில் கொள்ளப்படும் மூன்றாவது இந்து என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்துக்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுவதை உடனடியாக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான வழி வகைகளை அந்த மாகாண அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.