தமிழகத்திலேயே பெரிய ஆஞ்சநேயர் சிலை - எங்கு தெரியுமா?

Update: 2021-05-01 04:45 GMT

திருச்சி கொள்ளிடம் ஆற்றங்கரையில் தமிழகத்திலேயே மிகவும் உயரமான ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் சென்னை நங்கநல்லூரில் இருக்கும் ஆஞ்சநேயர் சிலையை காட்டிலும் பெரிய சிலையாக இது இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.




திருச்சி மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் நிறுவ உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னதாக சென்னை நங்கநல்லுாரில் 32 அடி உயர ஆஞ்சநேயர் சிலையே தமிழகத்தில் மிக உயரமான சிலையாக இருந்து வந்தது.

இதற்கு அடுத்ததாக நாமக்கல்லில் ஒரே கல்லால் செதுக்கப்பட்ட 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் கோவிலும் உள்ளது. இந்த இரண்டு கோவில்களை தொடர்ந்து தற்போது கொள்ளிடம் ஆற்றங்கரையில் 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை ஒரே கல்லில் நிறுவ உள்ளதாக தெரிய வருகிறது. இதற்காக கொள்ளிடம் ஆற்றங்கரையில் கோவில் மற்றும் பீடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த கோவிலை கட்டுவதற்கு முயற்சி எடுத்த ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த வாசுதேவன் இதற்கு முன்னதாக ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில் 40 ஆண்டுகளாக 2.5 அடி உயர ஆஞ்சநேயர் சிலையை வைத்து வழிபாடு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வாசுதேவன் தெரிவிக்கையில் இந்த சிலையை செய்வதற்காக நாமக்கல்லில் இருந்து ஒரே அளவில் கல் ஒன்றை வாங்கி அதனை செதுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று தற்போது சிலை செதுக்கும் பணிகள் முடிந்துள்ளதாகவும் இந்த சிலை விரைவில் கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

திருச்சி மேலூர் கொள்ளிடம் ஆற்றங்கரையில் கணக்கு சொந்தமான நிலத்தில் கோவில் கட்டி சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த சிலை பிரதிஷ்டை செய்து முடித்தவுடன் தமிழகத்திலேயே மிக உயரமான ஆஞ்சநேயர் கோவில் இதுவாகத்தான் இருக்கும் என்று அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Similar News