கர்நாடகா : 'கடவுள் இருக்கிறார், தடுப்பூசி தேவையில்லை' - தர்காவுக்கு செல்லும் கிராம மக்கள்!

Update: 2021-06-12 01:45 GMT

கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தடுப்பூசி போட மறுப்பதால் சுகாதார ஊழியர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். அந்த கிராமத்து மக்கள் தவால் மாலிக் என்ற துறவியின் ஆவி தங்களை எல்லா தீமைகளில் இருந்தும் பாதுகாக்கும் என்று நம்பிக்கை வைத்துள்ளதால் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்த கிராமத்தில் யார் வீட்டிலும் கதவுகள் இல்லை என்பது ஆச்சரியமான தகவல். மலையுச்சியில் உள்ள தாவல் மாலிக் தர்கா தங்களை தீய சக்திகளில் இருந்து காப்பாற்றி வருவதாக அவர்கள் நம்பி வருகின்றனர்.

இந்த கிராமத்தில் உள்ள கிராமவாசிகளை தடுப்பூசி போட வற்புறுத்துவது மிகவும் கடினமாக இருப்பதாகவும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் கடந்த நான்கு நாட்களாக தடுப்பூசி செலுத்த முயற்சித்தும் கிராம மக்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள் என்று சுகாதார பணியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் தடுப்பூசி முகாமைத் தவிர்ப்பதற்கு, அவர்கள் உடல்நிலை சரியில்லை, இறுதி சடங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற காரணங்களை கூறுவதாகவும், மீறி வற்புறுத்தினால், அந்த கிராமத்தில் கடவுள் அவர்களைப் பாதுகாப்பதால் அவர்களுக்கு கோவிட் -19 பற்றி கவலை இல்லை என்றும் கூறுகிறார்கள் என்று முல்கண்ட் ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவ அதிகாரி டாக்டர் பிரீத் கோனா கூறினார்.

ஒரு சிலர் தங்கள் முதல் தடுப்பூசி டோஸை அதிகாரிகளின் பலத்த போராட்டத்திற்கு பிறகு எடுத்துக் கொண்டனர். "நாங்கள் தொடர்ந்து கிராமவாசிகளை தடுப்பூசி தெளித்துக் கொள்ளுமாறு வலியுறுத்துவோம்" என்று அங்கு பணிபுரிந்து வரும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அந்த கிராமவாசி ஒருவர் தெரிவிக்கையில் "கிராமத்தில் எந்தவொரு கடுமையான உடல்நலப் பிரச்சினையும் ஏற்படவில்லை" என்றும், "எங்கள் வீடுகளில் கதவுகள் இல்லை, ஆனால் பல ஆண்டுகளாக எங்கள் கிராமத்தில் ஒரு திருட்டு கூட நடக்கவில்லை" என்றும், "நாங்கள் எந்தவொரு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளையும் எதிர் கொள்ளவில்லை" என்றும் "அதற்கு காரணம் நாங்கள் வழிபட்டு வரும் கடவுள் எல்லா தீமைகளிலிருந்தும் எங்களை பாதுகாக்கிறது" என்றும் கூறியுள்ளார்.

Source : Times of India

Similar News