புகழ்பெற்ற திருவானைக்காவல் கோவிலில் காணாமல் போன சிலை- நடந்தது என்ன.?

Update: 2021-02-28 01:45 GMT

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் கோவிலில் முருகன் சன்னதியில் இருக்கும் சிலை காணாமல் போய் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானதை தொடர்ந்து இது போலியாக பரப்பப்படும் செய்தி என்று கோவில் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.






திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் வளாகத்தில் உள்ள மல்லப கோபுரத்தின் வலது புறம் பிள்ளையார் சன்னதியும் இடது புறம் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னதியும் இருக்கின்றன.

சமீபத்தில் இந்த முருகன் சன்னதியில் இருக்கும் முருகன் சிலை காணாமல் போயிருப்பதாக சிலை இல்லாமல் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்த சன்னதியில் இருக்கும் முருகன் சிலையை அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றி விட்டதாகவும் அதை விற்றுவிட்டு போலியாக ஒரு சிலையை வைக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவின.

இது குறித்து திருவானைக்காவல் கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் தெரிவிக்கையில் "முருகன் சிலை காணவில்லை என்று வரும் தகவல்கள் அனைத்தும் போலியாக பரப்பப்படும் தகவல்கள். இந்தப் புகைப்படத்தில் புடைப்பு சிற்பத்தின் கீழே உள்ள பூஜை பொருள்கள் சிமெண்ட் மேடையை சிலர் முருகன் சிலை இருந்த பீடம் என்று தவறாக பதிவிட்டுள்ளனர். இதனால் சிலை காணவில்லை என்று வரும் தகவல்கள் அனைத்தும் வதந்தி இதை யாரும் நம்ப வேண்டாம்" என்று விளக்கம் அளித்துள்ளார்.

பிரசித்தி பெற்ற திருவானைக்காவல் கோவிலில் இருந்த முருகன் சிலை காணாமல் போய்விட்டதாக பரப்பப்பட்ட வதந்தியால் அப்பகுதி பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த நிலையில் கோவில் சிலை பத்திரமாக இருப்பதாக உதவி ஆணையர் வெளியிட்ட செய்தியால் குழப்பம் தீர்ந்துள்ளது.

எனினும் போலீஸ் சிலைகள் காணாமல் போனால் பல சம்பவங்களில் அறநிலைய துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்ததால் உண்மை என்ன என்று முழு தகவல்கள் வெளிவரும் வரை சிலைக்கு என்ன நேர்ந்தது என்று உறுதியாக கூற முடியாது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Similar News