தர்மபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் வரலாற்று சிறப்புமிக்க தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள குளத்தினை சீரமைக்குமாறு அப்பகுதி பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீர்த்தமலை என்பது தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். இங்கே 1200 அடி உயரத்திலுள்ள தீர்த்தமலையில் தீர்த்தகிரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு கோவில் வளாகத்தில் உள்ள குன்றில் இருந்து 50 அடி உயரத்தில் கால் அங்குல அளவிற்கு ஒரு குழாயின் வழியாக நீர் ஊற்றிக் கொண்டு இருக்கிறது. கோடை காலத்திலும் மழைக்காலத்திலும் ஆண்டு முழுவதும் குழாயின் வழியாக ஊற்றின் வரும் நீரின் அளவு மாறாமல் இருந்து வருவது இதன் சிறப்பாகும்.
இவ்வளவு சிறப்புமிக்க இந்த மலையில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர்கள் சிறு வண்டுகள் போன்ற உயிரினங்கள் வடிவில் வாழ்வதாக மக்கள் நம்பி வருகின்றனர். இந்தக் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தீர்த்தமலை அரசு தொடக்கப் பள்ளி வளாகம் ஒன்று உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த குளத்தில் நீராடுவதை வழக்கமாக வைத்து வந்துள்ளனர்.
ஆனால் அந்த குளம் தற்போது பராமரிப்பு இல்லாமல் பிளாஸ்டிக் குப்பைகளால் மூடப்பட்டு நீரின்றி காணப்பட்டு வருகிறது. அதேபோல் கோவிலை சுற்றி உள்ள பல இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பாக கோயில் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டுமென்றும் குளத்தை தூய்மை செய்து நீர் தேங்கும் அளவிற்கு சீர் செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.