தேர்தல் நடத்தை விதிமுறையால் கோவில் திருவிழாக்களுக்கு தடை இல்லை - காவல்துறை!

Update: 2021-03-10 10:06 GMT

தேர்தல் நடத்தை விதிமுறையை காரணம் காட்டி கோவில் திருவிழாக்களுக்கு தடை விதிக்கபடாது என்று விருதுநகர் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அறிவித்திருப்பது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விருதுநகர்மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான அனைத்துக் கட்சிகள் கூட்டம் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைத்து கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் தங்களின் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

அப்போது தேர்தல் நடத்தை முறை அமலில் இருக்கும் போது கோவில் திருவிழாக்கள் நடைபெறுமா என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் நமச்சிவாயம், இந்த தேர்தல் நடைபெறும் காலகட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பூக்குழி திருவிழா மற்றும் பங்குனி மாதத்தில் கிராமங்களில் நடைபெறும் பொங்கல் திருவிழாக்கள் என அனைத்து விழாக்களுக்கும் எந்த தடையும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

திருவிழாக்கள் நடைபெறும் போது காவல்துறை கண்காணிப்பில் ஈடுபட்டு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் விதமாக அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே கொரோனா விதிமுறைகளை காரணம் காட்டி அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் திருவிழாக்களை நடத்தவிடாமல் இருந்து வந்த நிலையில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி மாவட்ட நிர்வாகம் பங்குனி மாதத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்களுக்கும் தடை விதிக்கும் நிலையில் திருவிழாக்களுக்கு எந்த தடையுமில்லை என்று காவல்துறை துணை ஆணையர் அறிவித்திருப்பது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News