கோவிஷீல்டு தடுப்பூசிக்கு திடீர் தடை விதித்த டென்மார்க்: காரணம் இது தான்!

Update: 2021-03-12 11:54 GMT

டென்மார்க்கில் உள்ள சுகாதார அதிகாரிகள் அஸ்ட்ராஜெனெகாவின் கொரோனா தடுப்பூசியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்தனர். உயிரிழந்த ஒருவர் உட்பட சில நோயாளிகளுக்கு தடுப்பூசி வழங்கியதிலிருந்து இரத்தக் கட்டிகள் உருவானதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நடவடிக்கை அஸ்ட்ராஜெனெகாவின் கொரோனா தடுப்பூசி மூலம் தடுப்பூசி போடப்பட்ட மக்களிடையே கடுமையான இரத்த உறைவு ஏற்பட்டதாக அறிக்கைகள் வந்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று டேனிஷ் சுகாதார ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


ஆனால் டேனிஷ் சுகாதார அமைச்சகம் தடுப்பூசிக்கும் இரத்தக் கட்டிகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக உறுதிசெய்யப்படவில்லை என்று கூறியுள்ளது. எனினும் கூட, மேலும் அறிவிப்பு வரும் வரை அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பதற்கு நல்ல சான்றுகள் உள்ளன என்றாலும், தற்போதைய சூழ்நிலையில் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தப்பட்டு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என டேனிஷ் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


"அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பயன்பாட்டை நாங்கள் நிறுத்தவில்லை என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம். நாங்கள் அதன் பயன்பாட்டை இடைநிறுத்துகிறோம்" என்று டேனிஷ் சுகாதார ஆணையத்தின் இயக்குனர் சோரன் ப்ரோஸ்ட்ரோம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

டென்மார்க்கைத் தொடர்ந்து மேலும் ஆறு ஐரோப்பிய நாடுகள் அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசி பயன்பாட்டை இடைநிறுத்தியுள்ளதாக டேனிஷ் அதிகாரிகள் தெரிவித்தனர். அஸ்ட்ராஜெனெகாவின் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்டு எனும் பெயரில் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News