மண்ணில் புதைந்து கிடக்கும் பெருமாள் கோவில் - தொல்லியல் துறை கவனிக்குமா?
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் ஒன்று இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அதனை உடனடியாக பழமை மாறாமல் சீரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை போடிப்பட்டி அருகே குமரலிங்கம் பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கரிவரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது.1000 ஆண்டுகால வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த கோவில் பல ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறப்புடன் காணப்பட்டதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.ஆனால் தற்போது இந்த கோவில் பராமரிப்பின்றி புதர்கள் மண்டி காணப்படுகிறது.
கோவிலில் இருந்த சிலைகள் கூட மண்ணில் புதைந்து கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.பராமரிப்பு இல்லாமல் இருந்த இந்தக் கோவிலின் சிலையை சிலர் திருடிச் சென்ற முயன்றபோது சிலையின் எடை அதிகரித்ததன் காரணமாக அதனை பக்கத்திலிருந்த வயலில் விட்டு சென்றதாகவும் இதனால் அந்த சிலை மண்ணில் புதைந்து காணப்படுகிறது என்று அப்பகுதி முதியவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயிரம் ஆண்டுகால இந்தக் கோவிலின் வரலாறு தற்போது மண்ணில் புதைந்து கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கோவிலை பற்றி ஆராய்ச்சி செய்ய வந்த ஒரு சிலர் முன்பக்க கதவினை உடைத்து உள்ளே சென்று ஆராய்ச்சிகளை மேற்கொண்டு உள்ளனர். இதனால் தற்போது இந்த கோவிலின் முன்பக்கம் கதவு சேதமடைந்த காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே பழமை வாய்ந்த இந்த கரிவரதராஜ பெருமாள் கோவில் முழுவதும் மண்ணில் புதைந்து விடுவதற்கு முன் தொல்லியல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கோவிலில் புதைந்துள்ள வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும் மீண்டும் இந்த கோவிலை பழமை மாறாமல் புனரமைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.