ஏரி, குளங்களுக்கும் புவியியல் குறியீடு: மத்திய அரசின் அதிரடி திட்டம்!

Update: 2021-03-22 11:45 GMT

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜல் சக்தி அபியான் திட்டத்த்தின் ஒரு பகுதியாக மழை நீர் சேகரிப்பு பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்து நீர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்த பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தி பேசிய பிரதமர் மோடி, நாடு வளர்ச்சியின் பாதையில் நகர்ந்து வருவதால், நீரின் நெருக்கடியும் அதிகரித்து வருகிறது என்பதால், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இதில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.


 நாட்டில் நீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக நீர் தினத்தை முன்னிட்டு இந்த பிரச்சாரத்தின் அறிமுக விழா இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரும் கலந்து கொண்டனர். "21 ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கு நீர் கிடைப்பது மிகவும் முக்கியமானது" என்றும் அவர் கூறினார்.

ஜல் ஜீவன் மிஷன் தொடங்கப்பட்ட பின்னர், சுமார் 4 கோடி புதிய குடும்பங்களுக்கு மிகக் குறுகிய காலத்தில் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். "ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாட்டில் உள்ள 19 கோடி கிராமப்புற குடும்பங்களில், 3.5 கோடி குடும்பங்கள் மட்டுமே குழாயிலிருந்து தண்ணீர் எடுத்து வந்தன" என்று மோடி கூறினார்.


"இந்தியாவின் வளர்ச்சி பார்வை, அதன் சுயசார்பு நீர் இணைப்பை சார்ந்துள்ளது. அதனால்தான் நமது அரசாங்கம் அதன் கொள்கைகளில் நீர் நிர்வாகத்திற்கு முன்னுரிமை அளித்துள்ளது. அதிக மழை நீர் சேகரிப்பு வசதிகள் மூலம் நிலத்தடி நீர் பயன்பாட்டை வெகுவாகக் குறைக்க முடியும்" என்று பிரதமர் மோடி கூறினார். மேலும் இந்த பிரச்சாரத்தின்போது, நாடு முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளுக்கும் புவியியல் குறியீடு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் நீர் நிலைகள் தனியார் மற்றும் அரசு பயன்பாடுகளுக்காக ஆக்கிரமிக்கும் போக்கு குறையும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

Similar News