சிதிலமடைந்து அழிந்து வரும் நிலையில் கோவில் - அரசு நடவடிக்கை எடுக்குமா?

Update: 2021-03-31 07:15 GMT

திருச்சி சமயபுரம் அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ முக்தீஸ்வரர் கோவில் பராமரிப்பில்லாமல் அழிந்துவரும் நிலையில் உள்ளதால் அதனை உடனே புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சிராப்பள்ளி அருகே சமயபுரம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு அருகே பழமை வாய்ந்த முக்தீஸ்வரர் கோவில் உள்ளது. புராண கதைகளில் ஜடாயு என்பவர் இந்த இடத்தில் உயிர் போகும் தருவாயில் இருக்கும்போது மனமுருகி சிவனை வேண்டியதால் அங்கு சிவபெருமான் தோன்றி அவருக்கு முக்தி அளித்ததாக கூறப்பட்டுள்ளது.இதனாலேயே இந்த கோவிலுக்கு ஸ்ரீ முக்தீஸ்வரர் கோவில் என்று பெயர் வந்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர

புராணக்கதைகளில் இடம் பெற்றிருக்கும் இந்த கோவில் தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ளது. கோவிலை சுற்றி புதர்கள் மண்டி காணப்படுகிறது. கோவிலின் மதில் சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் கோவில் கோபுரத்தில் செடிகள் முளைத்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. கோவிலுக்குள் இருக்கும் கற்கள் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த கோவிலில் கிடைக்கும் கற்களை பற்றி அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது அங்கே பல ஆண்டுகளாக அந்த கற்கள் கிடப்பதாகவும் அதனைப் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கோவில் இருந்த இடம் கூட தெரியாமல் போகும் அளவிற்கு கோவில் மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காது அறநிலையத்துறையிடம் இருந்து இந்த கோவிலை மீட்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் #கோவில்அடிமைநிறுத்து என்ற பக்கத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் வீடியோ பதிவு செய்து பதிவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் 'கோவில் அடிமையை நிறுத்து' என்ற கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு கோவில்களில் பக்தர்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News