பல்லவர் காலத்தின் முதல் குடைவரை கோவில் - சிதைந்து கிடக்கும் அவலம்!

Update: 2021-04-03 07:47 GMT

பல்லவர் காலத்தில் கோவில் அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இயற்கையாய் அமைந்திருக்கும் மலைகளை குடைந்து அதில் குடவரை கோவில் அமைத்தனர். மேலும் இதே போல் ஒரே கல்லில் ஒரு கோவிலை கட்டி கோவிற்கலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றனர். ஆனால் தற்போது முன்னோர்களின் வரலாறு அனைத்தும் அழிந்து சிதைந்து கொண்டிருக்கிறது. அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக மண்டகப்பட்டில் அமைந்துள்ள முதலாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட முதல் குடைவரை கோவில் அழிந்து வருவதை நம்மால் கண்கூடாக காண முடிகிறது.




மண்டகப்பட்டு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த சிற்றூர் ஆகும். இங்கு பல்லவர் காலத்தில் முதன்முதலாக குடைவரை கோவில் ஒன்று கட்டப்பட்டது. இந்த கோவிலுக்கு எதிரே பெரிய ஏரி ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த குடைவரைக் கோவில் உயரமான மேடை போன்று அமைந்துள்ளது. மேலும் குகையின் மேல் முகப்பு சற்று நீண்டு அமைந்திருப்பதால் மழைநீர் உள்ளே செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கோவிலின் பின் சுவற்றில் மூன்று கருவறைகள் உள்ளன. அவற்றில் இறைவனை வைப்பதற்கு ஏதுவாக குழிகளும் காணப்படுகிறது. மேலும் கருவறை சுவற்றின் மேல் சுண்ணாம்பு பூசிய பூச்சு காணப்படுவதால் இங்கு இறைவனின் வடிவங்கள் ஓவியங்களாக தீட்டபட்டிருக்கலாம் என தெரிய வருகிறது.


ஆனால் தற்போது இந்த கோவில் மிகவும் சிதிலமடைந்து அழியும் தருவாயில் இருந்து வருகிறது. எனவே தொல்லியல் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த கோவிலை பழமை மாறாமல் புனரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அழிந்துவரும் தமிழர் பண்பாட்டையும் இந்து கோவில்களையும் உடனடியாக பாதுகாக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Similar News