தலை துண்டிக்கப்பட்ட முருகன், வள்ளி,தெய்வானை சிலைகள்-மக்கள் அதிர்ச்சி!

Update: 2021-04-06 12:24 GMT

ஆந்திராவில் இந்துக்கோயில்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சித்தூர் மாவட்டத்தில் முருகன் கோவிலில் இருந்த சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வெளியில் வீசப்பட்டு உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் இந்து கோவில்கள் தொடர்ந்து தாக்கப்பட்ட சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று சித்தூர் மாவட்டத்தில் போதகுட்டப்பள்ளி என்னும் கிராமத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்த முருகன் வள்ளி மற்றும் தெய்வானை தெய்வங்களின் திரு உருவ சிலைகள் உடைக்கப்பட்டு கோவில் அருகே கிடந்தன.

இந்த கோவில் அந்தப் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்ந்து வருகிறது. இதனால் சிலை உடைக்கப்பட்ட செய்தி அக்கிராமத்தில் காட்டுத் தீயைப் போல் பரவியது. தகவல் அறிந்த அக்கிராம மக்கள் கோவில் முன் கூடி உடைக்கப்பட்ட சிலையினை‌ கண்டு கதறி அழுதனர். இந்த சிலை உடைப்பு சம்பவம் தொடர்பாக காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதி பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திராவில் இந்துக் கோவில்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்கதையாகி வரும் நிலையில் பாரதிய ஜனதா கட்சி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மேலும் ஒரு இந்துக் கோவில் தாக்கப்பட்டு சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் சித்தூர் பகுதியில் நடைபெற்று உள்ளதால் வேண்டுமென்றே சிலர் இந்து கோவில்கள் மீது இவ்வாறு தாக்குதலை தொடர்ந்துள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

எனவே ஜெகன்மோகன் அரசு இந்துக்களின் மீது உள்ள வெறுப்புணர்வை நீக்கி கோவில்களை பாதுகாக்க வேண்டும் என்று அனைத்து இந்துக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News