இனி போலி நகைகளுக்கு வேலையில்லை! ஜூன் 1 முதல் ஹால்மார்க் திட்டத்தை கட்டாயமாக்கும் மத்திய அரசு!

Update: 2021-03-22 01:00 GMT

தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கான பிஸ் ஹால்மார்க் திட்டங்கள் குறித்து நகை வணிகர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை சென்னை கிளை அலுவலகத்தின் தலைவரும் விஞ்ஞானியுமான ஜெஸ்ஸி பென்னி தலைமையில் விருத்தாச்சலத்தில் உள்ள இந்திய தரநிலை அலுவலகம் நடத்தியது.

விருத்தாச்சலம், திட்டக்குடி, உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த சுமார் 20 உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில், ஜூன் 1 முதல் ஹால்மார்க் திட்டத்தை இந்திய அரசு கட்டாயமாக்கி இருப்பதால், பிஸ் ஹால்மார்க் முன்பதிவு பெறாத நகை வணிகர்கள் கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கும் வகையில் கூடிய விரைவில் இதற்கு விண்ணப்பிக்குமாறு விஞ்ஞானி முகுந்தன் ரகுநாதன் கேட்டுக்கொண்டார்.

இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம் என்றும், முன்பதிவுக்கான சான்றிதழ் உடனடியாக கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

போதிய முன்பதிவு இல்லாமல் ஹால்மார்க் நகைகளை விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்றும், இதற்கு அபராதமோ அல்லது சிறை தண்டனையோ விதிக்கப்படலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

நகை வணிகர்களுக்கான முன்பதிவு சலுகைகள் மீதான திட்டம் பற்றி விரிவாக பேசிய விஞ்ஞானி ஹரி மோகன் மீனா, பதிவு செய்வதற்கான நடைமுறை, சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் உரிய கட்டண விவரங்கள் உள்ளிட்டவை அடங்கிய கொள்கை பற்றி விளக்கினார்.

பதிவு செய்யும் ஒவ்வொரு வழிமுறையையும் அவர் விளக்கமாக எடுத்துரைத்தார். சிறிய நகை வணிகர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ. 7500 மட்டுமே என்றும், இது தற்போதைய தேதியில் இரண்டு கிராம் தங்கத்தின் விலையை விட குறைவானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கூட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் நகை வணிகர்களின் கேள்விகளுக்கு விரிவான பதில்கள் அளிக்கப்பட்டன.

Similar News