நேபாள ராணுவத்திற்கு 1 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி நன்கொடை: இந்திய ராணுவம் உதவி!

Update: 2021-03-30 11:19 GMT

இந்திய நாட்டின் சார்பாக தன்னுடைய அண்டை நாடுகளுக்கும் மற்றும் உதவியின் அடிப்படையில் பல்வேறு நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி மனிதாபிமான அடிப்படையின் பெயரில் வழங்கப்படுகிறது. குறிப்பாக 35 நாடுகளுக்கும் மேலாக தங்களுடைய தடுப்பூசியை மனிதாபிமான அடிப்படையில் இந்தியா வழங்கியுள்ளது. அந்த வகையில் நேபாள ராணுவத்திற்கும் நன்கொடையாக சுமார் ஒரு லட்சம் டோஸ் தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளது.


இரு அண்டை நாடுகளின் ராணுவத்திற்கு இடையே இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தியா தயாரித்த கொரோனா தடுப்பூசிகளை இந்திய ராணுவம் நேபாள ராணுவத்திற்கு ஒரு லட்சம் டோஸ் பரிசாக வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசிகளை நேபாள ராணுவத்திற்கு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இந்திய ராணுவ அதிகாரிகள் ஒப்படைத்ததாக காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் ட்வீட் செய்துள்ளது.


"நேபாளி ராணுவத்திற்கு இந்திய இராணுவம் பரிசளித்த மேட் இன் இந்தியா கொரோனா தடுப்பூசியின் 1,00,000 டோஸ் திரிபுவன் விமான நிலையத்தில் பெறப்பட்டது" என்று இந்திய தூதரகம் ட்வீட் செய்துள்ளது. நேபாளத்தின் சுகாதார மற்றும் முன்னணி வரிசை தொழிலாளர்களின் உடனடித் தேவைக்காக இந்திய அரசு முன்பு ஒரு மில்லியன் டோஸ் மேட் இன் இந்தியா கொரோனா தடுப்பூசிகளை நேபாளத்திற்கு பரிசாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், சீனா இன்று நேபாளத்திற்கு 8,00,000 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக அளித்ததாக நேபாள ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Similar News