நாட்டிலுள்ள நதிகளை இணைக்கும் திட்டத்தின் முதல் படியில் காலடி எடுத்து வைத்த இந்தியா! 62 லட்சம் மக்கள் பயன்பெறப்போகும் அசத்தல் திட்டம்!

Update: 2021-03-24 00:45 GMT

நதிகள் இணைப்பிற்கான தேசிய கண்ணோட்ட திட்டத்தின் முதல் திட்டமான கென் பெத்வா இணைப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது.

நதிகளை இணைப்பதன் மூலம் தண்ணீர் வரத்து அபரிமிதமாக உள்ள பகுதிகளில் இருந்து வறட்சி மிகுந்த மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு நீரை எடுத்துச் செல்லும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் தொலைநோக்குப் பார்வையை அமல்படுத்தும் வகையில் மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் துவக்கமாக இந்த திட்டம் அமையும்.

இந்த திட்டத்தின் கீழ் தௌதன் அணை, கென் மற்றும் பெத்வா ஆறுகளை இணைக்கும் கால்வாய், லோயர் ஆர் திட்டம், கோத்தா குறுக்கணை மற்றும் பீனா வளாகம் பல்நோக்கு திட்டம் ஆகியவை உருவாக்கப்பட்டு அதன்மூலம் கென் ஆற்றில் உள்ள நீர் பெத்வா ஆற்றிற்கு கொண்டு செல்லப்படும்.

இதன் மூலம் ஆண்டுக்கு 10.62 லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பிற்கு நீர்ப்பாசனம், 62 லட்சம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் மற்றும் 103 மெகாவாட் நீர் மின்சக்தி உருவாக்கப்படும்.

தண்ணீர் பஞ்சம் அதிகம் உள்ள பந்தல்கண்ட் பகுதி குறிப்பாக மத்தியப் பிரதேசத்தின் பன்னா, டிகாம்கர், சத்தர்புர், சாகர், தாமோ, தாட்டியா, விதிஷா, ஷிவ்புரி, ரெய்சன் ஆகிய மாவட்டங்களும், உத்தரபிரதேசத்தின் பண்டா, மகோபா, ஜான்சி மற்றும் லலித்புர் ஆகிய மாவட்டங்களும் இந்தத் திட்டத்தின் வாயிலாக பெரிதும் பயனடையும்.

நாட்டின் வளர்ச்சிக்கு தண்ணீர் பற்றாக்குறை தடைக்கல்லாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக மேலும் பல நதிகளை இணைக்கும் திட்டங்களுக்கு இது வழிவகை செய்யும். 

Similar News