30 அடி ஆஞ்சநேயர் சிலையை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு!

Update: 2021-04-15 09:27 GMT

சாலை விரிவாக்க பணிக்காக பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தில் சுமார் 30 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலையை அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வற்புறுத்துவதால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.





பண்ருட்டி அருகே கீழ்கொல்லை கிராமத்தில் பெயரிடும் அய்யனார் கோவில் ஒன்று அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த அய்யனார் கோவில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. இந்த கோவிலின் முன்பகுதியில் 30 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை ஒன்று உள்ளது.தற்போது அந்த பகுதியில் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தை நில கையகப்படுத்தும் அதிகாரிகள் நெடுஞ்சாலை பணிக்காக பயன்படுத்த முடிவு செய்தனர். ஆனால் கோவில் நிர்வாகம் சார்பாக சிலையை அப்புறப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் 30 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலையை அகற்றுவதற்காக நெடுஞ்சாலை துறையினர் மற்றும் காவல்துறையினர் பொக்லைன் இயந்திரத்துடன் கோவிலுக்கு வந்தனர்.

இந்த தகவலை அறிந்ததும் அப்பகுதி கிராம மக்கள் விரைந்து வந்து சிலையை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வட்டாட்சியர் கீதா தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது சிலையை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சிலையை கிராம மக்களே அகற்றி விடுகிறோம் என்று வட்டாட்சியரிடம் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் சிலையை அகற்றாமல் அங்கிருந்து சென்றனர்.

சாலை விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்துவது சரிதான் என்றாலும் பழமையான சிலைகளை இடித்து அப்புறப்படுத்தாமல் சிலைக்கு சேதம் ஏற்படாமல் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாலை விரிவாக்கப் பணிக்காக பழமையான கோவில் சிலை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News