தி.மு.க ஆதரவு இயக்கங்கள் மற்றும் கமலஹாசனின் பிராமணர்களின் மீதான தாக்குதல்கள் - ஒரு தொகுப்பு..!

Update: 2021-04-05 01:00 GMT

தமிழகத்தில் ஜாதியை ஒழிப்போம், சமூக நீதியை காப்போம் என்று தி.மு.க மற்றும் அதன் ஆதரவு இயக்கங்களான திராவிட கழகம், திராவிட விடுதலை கழகம், திராவிட கழகம் தமிழர் பேரவை, கறுப்பர் கூட்டம் உள்ளிட்ட இயக்கங்கள் தொடர்ந்து பிராமணர்களை மட்டுமே தாக்கி வருகின்றனர். இவர்கள் நிகழ்த்தும் பிராமணர்கள் மீதான தாக்குதல்கள் அனைத்தும் ஊடகங்களால் பெரிதாக பேசப்படாதவை. தி.மு.க-வின் ஆதரவு பெரும் இயக்கங்கள் இது வரை பிராமணர்கள் மீது நிகழ்த்திய தாக்குதல்களில் சிலவற்றை இங்கே தொகுத்துள்ளோம்.

2006-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பிரபல ஸ்ரீராம சமாஜம்(அயோத்தியா மண்டபம்) மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 பேர் படுகாயமடைந்தனர். மதியம் 3.30 மணியளவில் பூஜை முடிந்ததும் கோவிலின் முன்பக்க கதவு பூட்டப்பட்டது. அப்போது 2 ஆட்டோக்களில் 15 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. சாலையில் சென்று கொண்டிருந்த பொது மக்களைப் பார்த்து பூணுல் போட்ட, நாமம் போட்ட யாரையும் விடாதே, அடித்து உதை என்று கூறி சத்தம் போட்டனர். பயங்கர ஆயுதங்களுடன் வந்த அக்கும்பலைப் பார்த்து பீதியடைந்த மக்கள் அங்கிருந்து ஓடினர். அப்போது அந்தக் கும்பல், ஆசிட் நிரப்பப்பட்டிருந்த பாட்டிலை தூக்கி கோவில் வளாகத்தில் உள்ள மண்டபம் மீது வீசியது. இதில் மண்டபத்தின் திரைச் சீலையில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அப்போது, இரண்டு பெட்ரோல் குண்டுகளையும் மண்டபம் முன்பு இருந்த சாமி சிலை மீது வீசி எறிந்தனர். தெருவிலும் ஒரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பின்னர் அந்தக் கும்பல் கோவில் வாசலில் பூணூல், தர்ப்பைப் புல் உள்ளிட்ட பூஜை பொருட்களை விற்பனை செய்யும் தண்டபாணி என்பவரை உருட்டுக் கட்டையால் தாக்கியது. இதில் அவர் படுகாயமடைந்தார். இதே போல, பூக்கடையில் இருந்த முரளி என்பவரையும் அக்கும்பல் தாக்கியது. அவர் அரிவாளால் வெட்டப்பட்டார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் நடந்த இந்த பயங்கர தாக்குதலுக்குப் பின்னர் அந்த கும்பல் படு சாதாரணமாக அங்கிருந்து கிளம்பிச் சென்றது.

2006-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஈரோட்டில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் மடத்தில் உள்ளே புகுந்த திராவிட கழகத்தினர், பெரியார் கோஷம் இட்டு, அர்ச்சகர்களை தாக்கி, அங்கிருந்த ஸ்ரீ ராமர் சிலையை சேதப்படுத்தி, விக்கிரகங்களை உடைத்து, மடத்தை தாக்கி விட்டு சென்றனர். சங்கராபுரத்தில் உள்ள விநாயகர் சிலை, மூஞ்சூர் சிலை திராவிட கழகத்தினரால் தாக்கப்பட்டது. பெரம்பலூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் ஐயர் என்பவரும் இதே சமயத்தில் திராவிட கழகத்தினரால் தாக்கப்பட்டார்.

2015-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் சென்னை மைலாப்பூர் பகுதியை சேர்ந்த மூன்று வயாதான பிராமணர்களை, திராவிட விடுதலை கழகத்தினர் கடுமையாக தாக்கி அவர்களின் பூணுலை அறுத்துள்ளனர். விஸ்வநாத குருக்கள்(76), சந்தான கோபாலன்(71) மற்றும் ரங்கநாத ஐயர்(61) ஆகியோர் படுகாயமடைந்தது மட்டும் அல்லாமல் அவர்களின் பூணுலும் அறுபட்டது. அன்றைய தேதியில், 76 வயதான விஸ்வநாத குருக்கள் அவர்கள், கோவிலிலிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருக்கும் போது, 10 முதல் 12 பேர் கொண்ட திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த கும்பல் அவரை கடுமையாக தாக்கியுள்ளது. பிறகு அவரை கீழே தள்ளி தர தரவென இழுத்து அவரது பூணுலை அறுத்து வீசியுள்ளனர்.

அன்றைய தேதியில், 71 வயதான சந்தான கோபாலன், மேற்கு மாம்பலத்தில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று கொண்டிருந்த போது, திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த கும்பலால் சுற்றிவளைக்கப் பட்டு, தாக்கப்பட்டார். மேலும் அவரது பூணுலை அறுத்து திராவிட விடுதலை கழகத்தினர் ஜாதி வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ளனர். அன்றைய தேதியில், 61 வயதான ரங்கநாத ஐயர், சென்னை பார்த்தசாரதி கோவிலுக்கு சென்று மாலை வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத கும்பலால் தாக்கப்பட்டு பூணுல் அறுக்கப்பட்டது. இந்த கொடுமைகளுக்கு 12 வயது சிறுவனை கூட விட்டு வைக்கவில்லை பெரியாரிஸ்டுகள்.

2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம், திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த 4 பேர், சென்னையில் 8 பிராமணர்களை கடுமையாக தாக்கி, அவர்களின் பூணுலை அறுத்து, "பெரியார் வாழ்க" என்று கோஷம் போட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு காரணம், இந்த சம்பவத்துக்கு முன்னர் நடந்த பெரியார் சிலை உடைப்பு என்று கூறப்பட்டது. வேலூரில் உள்ள அந்த பெரியார் சிலையை உடைத்தது யார் என பார்த்தால் கம்யூனிஸ்ட் (CPI) கட்சியை சேர்ந்த ஒருவர். ஆனால் இதற்கு அநியாயமாக தாக்கப்பட்டு பூணல் அறுக்கப்பட்டதோ அப்பாவி பிராமணர்கள். அரசியல் ரீதியான தாக்குதல்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளாமல் அப்பாவி பிராமணர்களை பெரியாரிஸ்டுகள் தாக்கியது குறித்து தமிழக ஊடகங்களும் அசட்டு மெளனம் காத்தனர்.

இதோடு நின்றுவிடவில்லை தி.மு.க ஆதரவு இயக்கங்களின் பிராமணர்கள் மீதான தாக்குதல். பன்றிக்கு பூணுல் போடுவது, பூணுல் அறுப்பது, பிராமண பெண்களை "மாமி" என்று குறிப்பிட்டு கொச்சைப்படுத்தி சமூக வலைத்தளங்களில் பேசுவது என்ற எண்ணற்ற மன ரீதியான தாக்குதல்களும் அதிகம்.


அரசியல் காரணங்களுக்காக பிராமணர்களை இழிவாக பேசிவிட்டால் பிற சமூகத்தின் வாக்குகள் வந்துவிடும் என்ற நோக்குடன் பிராமணர்களை தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறது தி.மு.க. அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு, திமுக I.T அணியின் செயலாளர் P.T.R தியாகராஜன் பிராமணர்களை இழிவுபடுத்தி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அவரது ட்விட்டில், "யார் கோவில்களைப் பராமரிப்பது என்பது முக்கியம் அல்லது பா.ஜ.க அல்லாத ஆளும் மாநிலங்களில் யார் கோவில்களை நிர்வகிப்பது என்பது முக்கியமா? ஆயிரம் ஆண்டுகளாகச் சாதியை கடைப்பிடித்து, ஊழல் செய்து வரும் எங்கள் "நிபுணர்கள்" முன்னிலையில் கோவில்களைப் பராமரிக்க இந்த விஷசக்தி யார்?", என்று கூறப்பட்டிருந்தது.

மேலும் அவரது ட்விட்டில் ஒரு விளக்கப்படம் பொருத்தப்பட்டு, பிராமண சமூகங்கள் கோவில்களைத் தனி உரிமை கொண்டாட முயற்சிக்கிறது என்ற கூற்றுடன், "இந்து என்ற சொல் வருவதற்கு முன்பே இருந்த கோவில்களுக்கு ஒரு குறிப்பிட்ட சமூகம் எவ்வாறு உரிமை கோர முடியும்?", "தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சி செய்யவில்லை என்பதற்காக பா.ஜ.க இதனைச் செய்ய முயற்சிக்கிறதா?, உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோவில்கள் பா.ஜ.க நிர்வாகிகளால் பராமரிக்கப்படுகின்றது என்றால் உண்மையில் அது இந்து சமூகத்துக்கு அவமரியாதை அல்லவா?", கோவில்களைக் கட்டுப்படுத்த விருப்பமும் அந்த நிபுணர்கள் அனைவரும் சமூகத்தில் இன்னும் வர்ண அமைப்பிலும் மற்றும் உயர் சாதி குறிச்சொல்லுடன் இருக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் என் நமது கோவில்களை ஆக்கிரமிக்க வேண்டும்?", மற்றும் "இந்த அழைப்பு அவர்களின் சாதிவாதத்தையும், தற்போதைய நவீன காலங்களிலும் அவர்கள் தீண்டாமையை கடைப்பிடிப்பதை விரும்புகிறார்கள்," என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது என்பதும் அவரது ட்விட்டில் கூறப்பட்டிருந்தது.

பிராமணர்கள் மீது மட்டும் வெறுப்பை விதைத்து விட்டு, ஜாதியை ஒழித்து விட்டோம் என்று பெரியாரிஸ்டுகள் கூறி வருவது அவர்களின் ஜாதி வன்மத்தையே காட்டுகிறது என்பது விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

தி.மு.க மற்றும் ஆதரவு இயக்கங்கள் இவ்வாறு இருக்க, மக்கள் நீதி மையம் என்ற அரசியல் கட்சியை துவங்கி தேர்தலில் போட்டியிடும் நடிகர் கமலஹாசனின் பிராமண வெறுப்போ வேறு விதம். உங்களை பாதித்த நூல் எது என்று ஜூன் 30 2018 அன்று ட்விட்டரில் ஒருவர் கேட்ட கேள்விக்கு "பூணூல்" என்று பதிலளித்தார் கமலஹாசன். "நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், "பூணூல் " அதனாலேயே அதை தவிர்த்தேன். ", என்று ட்விட்டர் பதிவிட்டார் கமலஹாசன்.

கமலஹாசன் பிராமண வெறுப்பை கக்கியது முதல் முறையல்ல. விஸ்வரூபம் திரைப்படத்தில், பிராமண பெண் சிக்கன் சாப்பிடுவது போல் ஒரு காட்சியை அமைத்தார். கமலஹாசன் சிக்கன் சமைத்துவிட்டு ஆண்ட்ரியா-வை ருசி பார்க்க சொல்வதற்கு, "பாப்பாத்தி அம்மா நீ சாப்பிட்டு சொல்லு", என்ற வசனத்தை பேசியிருப்பார். இதில் சிக்கன் சாப்பிடுவது விமர்சனம் இல்லை. ஆனால், "பாப்பாத்தி அம்மா" என்று குறிப்பிட்டிருப்பார். இந்த இடத்தில், ஏன் ஜாதி பெயரை பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வியை ஒரு திரை விமர்சகரோ அல்லது அரசியல் விமர்சகரோ கூட இது வரை முன்வைத்ததில்லை.

ஆனால் தற்போது தேர்தல் நெருங்கும் தருணத்தில், உதயநிதி ஸ்டாலின் பிராமணர்களை சந்தித்து ஆசி பெறுவது, பிராமணர்களுக்கு கொரோனா உதவி அளிப்பது உள்ளிட்டவை அனைத்தும் செய்து வருகிறார். மக்கள் நீதி மையம் சார்பில் மைலாப்பூரில் போட்டியிடும் நடிகை ஸ்ரீப்ரியா பிராமணர்களின் வாக்குகளை கவரும் வகையிலும் பேசி வருகிறார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் நடிகர் கமலஹாசனோ ஐயங்கார் மக்களின் வாக்குகளை பெற தன்னை ஒரு ஐயங்காராக காட்டிக்கொள்ள பார்க்கிறார் என்ற செய்திகளும் கசிந்துள்ளது. இவர்கள் தற்போது செய்வது அனைத்தும் தேர்தல் நாடகம் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.

Tags:    

Similar News