தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து ஒரு வைரல் செய்தி பரவி வருகின்றது. அதில் பெண்கள் தங்கள் மாதவிடாயின் போது நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் என்பதால், அதற்கு முந்தைய ஐந்து நாட்களுக்கு முன்னரும் மற்றும் அதற்கு பிந்தைய ஐந்து நாட்களுக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டாம் என்று கூறப்பட்டிருந்தது. இது மக்களிடையே பீதியைக் கிளப்பியுள்ளது.
அந்த வைரல் செய்தியில், அந்த நாட்களில் பெண்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வதன் மூலம், முதலில் அது எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் பின்னர் அதனை அதிகரிக்கும் என்பதால் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த செய்தியானது வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பரப்பப்பட்டு வருகின்றது. இந்த வைரல் குற்றச்சாட்டுப் போலியானது ஆகும். இதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.
இதுகுறித்து கருவுறுதல் நிபுணர் Dr யுவராஜ்யிடம் கேட்ட பொழுது, இந்த வைரல் செய்தி போலியானது ஆகும். தடுப்பூசி மாதவிடாய் மாற்றங்களில் பாதிக்கும் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்தார். அதற்கான தாக்கம் ஒரு சதவீதமே இருக்கும்.
பல செய்தி ஊடகங்களும் இது குறித்து சுகாதார சிறப்பு நிபுணர்களைத் தொடர்பு கொண்டது. பல நிபுணர்கள் கொரோனா தடுப்பூசிக்கும், பெண்கள் மாத விடாய்க்கும் எந்த தொடர்பும் இல்லை, இது பாதிப்பு ஏற்படுத்தும் என்பதற்கான ஆதாரமும் இல்லை என்றே குறிப்பிட்டுள்ளனர்.
தற்போதைய நிலவரப் படி, மாதவிடாயின் போது தடுப்பூசி எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதற்கான அறிவியல் ஆய்வு மற்றும் சுகாதார அறிக்கையும் இல்லை. எனவே தற்போது வைரலாகி வரும் கூற்றுப் போலியானது மற்றும் தவறானது ஆகும்.