கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவர் கிணற்றுக்குள் மிதந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் ஒரு கான்வென்ட்டில் தங்கி இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக கேரள காவல்துறை தெரிவித்துள்ளது.
மெபில் என்ற 42 வயது கன்னியாஸ்திரி செயின்ட் ஜோசப் கான்வென்ட்டில் தங்கி இருந்தார். காலை ஜெபத்தில் கன்னியாஸ்திரி மெபில் பங்கேற்காததால் கான்வென்ட்டில் தங்கி இருந்தவர்கள் அவரைத் தேடத் தொடங்கியுள்ளனர். அவர்கள் அவரைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அவரது அறையில் ஒரு கடிதம் கிடைத்துள்ளது.
அந்த கடிதத்தில் தன்னால் உடல் ரீதியான துன்பங்களைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும்தறது உடல் கான்வென்ட் வளாகத்தில் உள்ள கிணற்றில் இருக்கும் என்றும் எழுதி வைத்திருந்ததாக காவல்துறை கூறியுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அண்மையில் 28 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்ட கன்னியாஸ்திரி அபயாவின் இறப்பை நினைவுபடுத்துவது போல் அமைந்துள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக கேரள காவல்துறை மற்றும் சிஐடி வழக்கை முடித்து வைத்தன.
ஆனால் பின்னர் சிபிஐ விசாரணையில் கான்வென்ட்டில் மற்றொரு கன்னியாஸ்திரி மற்றும் பாதிரியார் இடையிலான தவறான உறவை தவறுதலாக பார்த்து விட்டதால் அபயா கொலை செய்யப்பட்டு கிணற்றில் தள்ளப்பட்டார் என்று தெரிய வந்தது. எனவே கன்னியாஸ்திரி மெபில் இறப்பு குறித்தும் தீவிரமாக விசாரித்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.