கோவில் குளத்தைக் கண்டுகொள்ளாத அறநிலையத் துறை - கழிவுநீர்த் தொட்டியாக மாறியதால் பக்தர்கள் வேதனை!

Update: 2021-05-06 01:00 GMT

அருப்புக்கோட்டையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பாண்டியர் கால கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தை புனரமைக்குமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழி செல்லும் வழியில் அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் கோவில் அமைந்துள்ளது.

சொக்கலிங்கபுரத்தில் அமைந்துள்ள இந்தக் கோவில் மாறவர்மன் சுந்தரபாண்டிய மன்னனால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தக் கோவிலின் தெப்பக்குளம் பராமரிப்பின்றி இருப்பதாகவும்‌ அதைப் புனரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

கோவிலில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் நீராடிவிட்டு குளத்துக்கு அருகே அமைந்துள்ள படித்துறை விநாயகரை வணங்கிவிட்டு மீனாட்சி சொக்கநாதரை வழங்குவதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தற்போது இந்த குளம் வறண்ட தோடு கழிவுநீர் தேங்கி நிற்கும் அவல நிலையை அடைந்துள்ளது.

தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரும் பாதை அடைபட்டு விட்டதாலும் குளத்தை முறையாக தூர் வாராததாலும் தண்ணீர் தேங்காமல் குளம் வறண்டதாக பக்தர்கள் கூறுகின்றனர். முறையான பராமரிப்பு இல்லாததால் தண்ணீர் தேங்காததோடு அவ்வப்போது பெய்யும் மழை நீரும் கழிவு நீரும் தேங்கி பாசி படர்ந்து கழிவு நீர் தொட்டியாக மாறிவிட்டதாகவும் கூறுகின்றனர்.

மேலும் தெப்பக் குளத்தை சுற்றி சுகாதாரமற்ற நிலை இருப்பதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். கோவில் உண்டியலை மட்டும் முறை தவறாமல் எண்ணும் அறநிலையத்துறை கோவிலின் பராமரிப்பிலும் அக்கறை காட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோடைகாலத்தில் நீர்பற்றாக் குறையை சந்திக்கும் அருப்புக்கோட்டை போன்ற இடங்களில் கோவில் குளங்களை முறையாக பராமரித்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஆனால் அவற்றை தூர் வராமலும் சீரமைக்கவும் விடுவதால் அவை ஏற்படுத்த பட்டதன் நோக்கமே சிதைந்து போகிறது. எனவே அறநிலையத்துறை தெப்பக் குளத்தில் உள்ள கழிவு நீரை அகற்றி குளத்தை சீரமைத்து மீண்டும் தண்ணீர் தேங்க வழி செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News