இந்தியாவைக் கேலி செய்ய முயன்று தன் முகத்தில் தானே கரியைப் பூசிக் கொண்ட சீனா!
இந்தியா பிணங்களை எரிக்க தீ மூட்டிக் கொண்டிருப்பதாகவும் ஆனால் தங்களோ சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைக் கட்டமைக்க தீ மூட்டிக் கொண்டிருப்பதாகவும் சீன ஊடகங்கள் பீற்றிக் கொண்டிருந்தன. ஆனால் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தை கட்டமைப்பதற்காக செலுத்தப்பட்ட ராக்கெட் இலக்கை அடையாமல் பூமியை நோக்கி விழப் போவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல ஆயிரம் கிலோ எடை கொண்ட இந்த ராக்கெட் எங்கு விழும் என்று விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ராக்கெட் இந்த வாரத்தின் இறுதியில், குறிப்பாக மே 8 அன்று வளி மண்டலத்தில் நுழைந்து பூமியை அடையக் கூடும் என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ராணுவ அமைப்பான பென்டகன் இந்த ராக்கெட்டின் பாதையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ராக்கெட்டின் உடைந்த பாகங்கள் குறிப்பாக இங்கு தான் விழும் என்று இப்போது கணிக்க முடியாது என்றும் வளிமண்டலத்தில் நுழைந்த பின் தான் அது பற்றி தெரிய வரும் என்றும் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் கூறியுள்ளன.
கடந்த வியாழன் அன்று விண்ணில் ஏவப்பட்ட இந்த ராக்கெட் 22 டன், அதாவது 22,000 கிலோ எடை கொண்டது. எனவே இது பூமியில் விழும் போது மக்கள், விலங்குகள், இருப்பிடங்கள் என்று பாதிப்பு ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சீன விண்வெளி ஆய்வு நிறுவனமோ ராக்கெட்டின் உடைந்த பாகங்கள் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திலோ அல்லது சர்வதேச கடல் பகுதியிலோ விழும் என்று சப்பைக்கட்டு கட்டிக் கொண்டு இருக்கின்றன.
கடந்த ஆண்டு லாங் மார்ச்- 5B என்ற இதே ரக ராக்கெட்டை சீனா செலுத்திய போது அந்த முயற்சி தோல்வி அடைந்து ஐவரி கோஸ்ட் நாட்டின் கிராமப் பகுதிகளில் பல வீடுகளை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 1979ஆம் ஆண்டு அமெரிக்காவின் சர்வதேச விண்வெளி ஆய்வகம் நிறுவும் முயற்சியில் ஆஸ்திரேலியாவில் ஸ்கை லேப் சிதறியதே பெரிய அளவிலான விண்வெளி விபத்தாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Source: WION