சுவாமி ஊர்வலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த 'மர்ம நபர்கள்'- தலையில் குட்டி தீர்ப்பளித்த நீதிமன்றம்.!
கோவில் திருவிழாவின் போது தாங்கள் வசிக்கும் தெருக்கள் வழியாக சுவாமி ஊர்வலம் செல்லக் கூடாது என்று முஸ்லிம்கள் தடை விதிக்கக் கோரியதற்கு நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத சகிப்புத்தன்மை இன்மையை அனுமதித்தால் நாட்டின் மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல என்று சுட்டிக் காட்டி அனைத்து சாலைகள், தெருக்களிலும் கோவில் ஊர்வலங்களை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை அருகே வி.களத்தூர் என்ற கிராமத்தில் மேற்குப் பகுதியில் இந்துக்களும் கிழக்கே முஸ்லிம்களும் பெருமளவில் வசித்து வருகின்றனர். இங்கு செல்லியம்மன் கோவில், லக்ஷ்மி நாராயண பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில், ராயப்பன் கோவில் என்று நான்கு கோவில்களில் இந்துக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்துக் கோவில்களில் திருவிழா நடக்கும்போது முஸ்லிம்கள் வசிக்கும் தெருக்களின் வழியாக சுவாமி ஊர்வலம் செல்ல எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆண்டாண்டு காலமாக முன்னர் இந்துக்கள் வசித்துவந்த பகுதிகள் வழியாக சுவாமி ஊர்வலம் சென்ற நிலையில் தற்போது முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் வழக்கம்போல் திருவிழாவை நடத்த அனுமதி கோரி களத்தூரைச் சேர்ந்த ராமசாமி உடையார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை எதிர்த்து சுன்னத் வால் ஜமாத் என்ற இஸ்லாமிய அமைப்பின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2018 டிசம்பர் மாதத்தில் பிரதான சாலைகளில் மட்டுமே ஊர்வலம் நடத்த வேண்டும் என்றும் மஞ்சள் நீர் ஊற்றுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்றும் நிபந்தனை விதித்து நீதிமன்றம் திருவிழாவுக்கு அனுமதி அளித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து இரு தரப்பினரும் மேல்முறையீடு செய்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மற்றும் வேல்முருகன் தலைமையிலான அமர்வு, மத சகிப்புத்தன்மை இன்மையை அனுமதித்தால் நாட்டின் மதச் சார்பின்மைக்கு பங்கம் ஏற்படும் என்றும், கோவில் விழாக்களின் போது சாலைகளிலும் தெருக்களிலும் ஊர்வலங்களை ஒழுங்குபடுத்தலாமே தவிர குறிப்பிட்ட பகுதியில் ஊர்வலம் நடக்க கூடாது என்று தடை விதிக்க முடியாது என்று கூறினர்.