கோவில் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி- அனுமதி இன்றி விதிகளை மீறி கட்டுமானம்.!

Update: 2021-05-09 01:36 GMT

நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள பிறவி மருந்தீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை சமூக விரோதிகள் சிலர் ஆக்கிரமிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலின் தெற்கு வீதியில் கோவிலுக்குச் சொந்தமான நிலம் உள்ளது.

இந்த நிலத்தை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிக்க முயன்றுள்ளனர். அங்கு ஆகம விதிகளுக்கு புறம்பாகவும், நகராட்சியில் அனுமதி பெறாமல் நகரமைப்பு விதிகளை மீறியும் கட்டுமானப் பணி நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் இங்கு கட்டுமானப் பணி நடைபெறக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

எனினும் இந்த உத்தரவை மதிக்காமல் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட உதவி ஆணையர் முன்னிலையில் கோவில் செயல் அலுவலர், காவல் துறையினரின் உதவியுடன் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன. மீண்டும் நிலம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாவதைத் தடுக்க கோவில் நிலத்தைச் சுற்றி கம்பி வேலி அமைத்து, சீல் வைத்து, இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடம் என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News