அறங்காவலர்கள் துணையுடன் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்கள்!

Update: 2021-05-13 13:23 GMT

அறங்காவலர்கள் துணையுடன் ஆக்கிரமிக்கப்பட்ட சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க அறநிலையத் துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பி இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இந்து சமய அறநிலைய துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள காரணீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக சைதாப்பேட்டை, வேளச்சேரி, மடுவங்கரை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் நிலங்கள் உள்ளன. சைதாப்பேட்டையைச் சேர்ந்த சேர்ந்த பார்த்திபன் என்பவர் இந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் கடந்த 1962ம் ஆண்டு முதல் 1982ம் ஆண்டு வரை பொன்னுசாமி, ரத்தினவேல் மற்றும் பாலசுந்தரம் ஆகியோர் கோவில் அறங்காவலர்களாக இருந்ததாகவும், பதவிக் காலத்தில் அவர்கள் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அறநிலையத் துறை சட்டப்படி கோவில் நிலங்களில் அறநிலையத் துறை அனுமதியில்லாமல் கட்டிடங்கள் கட்டக் கூடாது என்று விதி இருக்கும் நிலையில், காரணீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிக்க அனுமதித்ததோடு அந்த நிலங்களில் சட்டவிரோதமாக கட்டிடங்களைக் கட்டவும் அறங்காவலர்களும் அறநிலையத் துறை அதிகாரிகளும் அனுமதித்தாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் வாடகைதாரர்கள் பலர் கோவில் நிலங்களைப் பயன்படுத்தி வரும் நிலையில், 79 பேர் செலுத்தும் வாடகை விவரங்களை மட்டுமே அறநிலையத் துறை வழங்கியது என்றும் ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரித்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் சொத்துக்களை மீட்கவும், நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்காத அறநிலையத் துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அறநிலைய துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். திருப்தி அடையாத நீதிபதிகள் கோவில் நிலங்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Tags:    

Similar News