பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலின் முகப்பிலேயே நகராட்சி கழிவறையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி அசுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் பலமுறை புகார் அளித்தும் அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பொள்ளாச்சி அருகே சுப்பிரமணியன் சுவாமி கோவில் முன் திறந்த வெளியில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கோவில் அமைந்துள்ள காரைக்கால் அம்மையார் வீதியின் அருகே குட்டை காரைக்கால் அம்மையார் வீதியில் நகராட்சிக்கு சொந்தமான கழிவறை இருக்கிறது.
இந்தக் கழிவறையில் இருந்து கழிவு நீர் வெளியேறி காரைக்கால் அம்மையார் வீதியில் உள்ள சாக்கடைகள் கால்வாயில் குட்டையாகத் தேங்கி நிற்கிறது. சாக்கடை நிரம்பியதால் ரோட்டில் நீர் செல்வது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வசிக்கும் மக்களுக்கும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் இது பெரும் அவஸ்தையை ஏற்படுத்தியுள்ளது.
சுப்ரமணிய சுவாமி கோவில் முன் பகுதி வழியாகவே கழிவுநீர் ரோட்டில் செல்வதால் கோவிலின் புனிதத் தன்மை கெடுவதோடு நோய் பரவும் அபாயத்தையும் ஏற்படுத்துவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி இருப்பதாகவும் இதை சரி செய்ய நகராட்சி நிர்வாகத்துக்கு பல முறை வேண்டுகோள் விடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் படுக்கைகளே இல்லாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், டெங்கு மலேரியா போன்ற நோய்கள் பரவக் கூடிய அபாயத்தை ஏற்படுத்தும் கழிவுநீர்க் குட்டையை நகராட்சி நிர்வாகம் கவனிக்காமல் இருப்பது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Source: https://m.dinamalar.com/detail.php?id=2769285