கொரோனா ஆய்வில் கிறுஸ்தவ மதப் பிரச்சாரம் - பழங்குடியினர் கொந்தளிப்பு!

Update: 2021-05-25 06:28 GMT

மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா விழிப்புணர்வு தொடர்பான களப் பணியின் போது செவிலியர் ஒருவர் கிறிஸ்தவ மதப்‌ பிரச்சாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மத்திய பிரதேசம் ரட்லம் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வாழும் பஜாலா என்ற பகுதியில் களப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவர் கிறித்தவ மத போதனைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி மதப் பிரச்சாரம் மேற்கொண்டது தெரிய வந்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதியில் ஆய்வு செய்யச் சென்ற செவிலியர் மதம் பிரச்சாரத்தில் ஈடுபட்டது உண்மை என்று காவல் துறையினர் உறுதி செய்துள்ளனர். அவரிடம் இருந்து கிறிஸ்தவ மத போதனைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சந்தியா திவாரி என்ற அந்த செவிலியர், அரசுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டே கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அங்கு சென்று பார்த்த போது அவர் உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்களுடன் கிறிஸ்தவ போதனைகள், ஜெபக் கூட்டங்கள், பாடல்கள் ஆகியவை அடங்கிய பிரசுரங்களையும் விநியோகித்து தெரிய வந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

சமூக வலைதளங்களில் இது குறித்து பகிரப்பட்டு வரும் வீடியோவில் எதற்காக மதப் பிரச்சாரம் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கிறீர்கள் என்று கேட்ட போது, தொடர்ந்து தான் செய்வதில் எந்தத் தவறும் இல்லை என்று அந்த செவிலியர் கூறுகிறார். இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொள்கிறார்.

தான் எல்லாரிடமும் மதப் பிரச்சாரம் செய்யவில்லை என்றும், அது 'தேவைப்படுபவர்களிடம்' மட்டுமே செய்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களோ தங்களுக்கு இந்த மாதிரியான மத பிரச்சாரம் எதுவும் தேவையில்லை என்று கூறுகின்றனர். இதையடுத்து காவலர்கள் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்த போதும் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அவர் தொடர்ந்து வாதிட்டுள்ளார்.

ஆனால் அவர் "இயேசுவிடம் ஜெபித்தால் மக்கள் கொரோனா தொற்று ஏற்படுவதில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்" என்று மக்களிடையே கூறியது தெரிய வந்ததாலும், அதை நிரூபிக்கும் வகையில் மத போதனை அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியருக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Source: OpIndia

Tags:    

Similar News