ட்விட்டரின் எதிர்காலம் என்ன? ட்விட்டரில் முதலீடு செய்த சிலிக்கான் வேலி பிரபலங்கள் கூ செயலியில் முதலீடு..!

Update: 2021-05-27 01:00 GMT

இந்திய அரசின் சட்ட திட்டங்களை மதிக்காமல் ட்விட்டர் நிறுவனம் செயல்படுவதை தொடர்ந்து ட்விட்டர் இந்தியாவில் தடை செய்யப்படலாம் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. இந்நிலையில் ட்விட்டர் போன்றே இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட 'கூ' (koo) செயலிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. 

சிலிக்கான் பள்ளத்தாக்கின் பிரபல முதலீட்டாளர்கள் நவல் ஸ்ரீகாந்த் மற்றும் பாலாஜி ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோர் கூ செயலியில் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இருவரும் ட்விட்டர் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டைகர் குளோபல் என்ற பிரபல முதலீட்டு நிறுவனமும் 100 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூ செயலிக்கு முதலீடு திரட்டும் முயற்சியில் ஏற்கனவே அதில் முதலீடு செய்துள்ள பல நிறுவனங்களும் அவற்றின் துணை நிறுவனங்களும் முதலீட்டை அதிகரிக்க ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

கூ செயலி இதுவரை எந்த லாபத்தையும் ஈட்டவில்லை என்ற போதும் முதலீட்டாளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் இந்த புதிய முயற்சிக்கு ஆதரவளித்து வருகின்றனர். இதுகுறித்து கூ செயலியின் தலைமை செயல் அதிகாரி அப்ரமேய ராதாகிருஷ்ணன் கூறுகையில் லாபம் ஈட்ட விளம்பரங்களை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட இந்தியாவிற்கே உரித்தான தனித்துவமான யோசனைகளை செயல்படுத்துவது பற்றி ஆலோசித்து வருவதாக கூறியுள்ளார்.


கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட ட்விட்டருக்கு இணையான கூ சமூக வலைதளம் ட்விட்டர் நிறுவனத்தின் பாகுபாடு கொள்கைகள் காரணமாக தொடர்ந்து ஆதரவை பெற்று வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 5 மில்லியன் மக்கள் கூ செயலியை தரவிறக்கம் செய்துள்ளார்கள். பிரபல கிரிக்கெட் வீரர் ஜவகல் ஸ்ரீநாத், புக் மை ஷோ நிறுவனர் ஆஷிஷ் ஹேம்ரஞ்சனி, உடான் துணை நிறுவனர் சுஜீத் குமார், ஃப்ளிப்கார்ட் தலைமை செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரும் கூ செயலியின் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டியதாக கூறப்படுகிறது.

Source: Money Control

Tags:    

Similar News