யுனெஸ்கோ பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பட்டியலில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் - மக்கள் மகிழ்ச்சி.!
காஞ்சிபுரத்தில் உள்ள தொல்லியல் துறை மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் 11 கோவில்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களாக அறிவிப்பதற்கான தற்காலிக பட்டியலில் இடம் பெற்றுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ள மாமல்லபுரம் பல்லவர் கால குடவரை சிற்பங்களும் கோவிலும் என 45 வரலாற்று நினைவுச் சின்னங்களை யுனெஸ்கோ உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்களாக அங்கீகரித்துள்ளது. மாமல்லபுரம் குகைக் கோயிலும் குடைவரை சிற்பங்களும் சர்வதேச அளவில் பெரும்புகழ் பெற்ற போதும் அவற்றுக்கு நிகராக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள புராதனமான கோவில்களுக்கும் கலைச் சின்னங்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
அந்த வகையில் காஞ்சிபுரத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள 17 கோவில்கள் மற்றும் 31 பாரம்பரிய கலைச் சின்னங்களுக்கு அங்கீகாரம் கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், சுரகேஸ்வரர், முக்தீஸ்வரர், கைலாசநாதர், பிறவாதீஸ்வரர், இறவாதீஸ்வரர் மற்றும் வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளிட்டவற்றுடன் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏகாம்பரநாதர் மற்றும் வரதராஜப் பெருமாள் கோவில் ஆகிய 11 கோவில்கள் உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட உள்ள நினைவு சின்னங்களின் தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது காஞ்சிபுரம் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் காஞ்சிபுரம் கோவில்களின் மீது சர்வதேச ஆன்மிக சுற்றுலா பயணிகளின் கவனம் விழும் என்றும் இதனால் கோவில்களின் பராமரிப்பு மேம்படுவதோடு கோவில்கள் தொடர்பான வாழ்வாதாரத்தை நம்பியுள்ள வாழ்க்கையையும் மேம்படுத்தும் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தொல்லியல் துறை அதிகாரிகள் நாடு முழுவதிலும் இருந்து 48 பாரம்பரிய கலைச் சின்னங்கள் பரிந்துரைக்கப்பட்டதாகவும் அவற்றில் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் உட்பட காஞ்சிபுரத்தில் உள்ள 11 கோவில்களின் பெயர்களும் யுனெஸ்கோ இணையதளத்தில் வெளியாகியுள்ள தற்காலிக பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக கூறியுள்ளனர்.
இதனால் சமீபத்தில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு அனைவருக்கும் காட்சியளித்த அத்திவரதர் ஆட்கொண்டிருக்கும் வரதராஜ பெருமாள் கோவில் உட்பட காஞ்சிபுரம் நகரில் உள்ள கோவில்களை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தும் என்றும் இதனால் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படும் வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
Source: Hindu Tamil