கோவில் மண்டபத்தை ஆக்கிரமித்து அராஜகம் - இந்து முன்னணி முயற்சியால் மீட்பு..!
இந்து முன்னணியின் தொடர் முயற்சிக்குப் பின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரசித்திபெற்ற பணாமுடீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கருங்கல் மண்டபத்தை ஆக்ரமித்தவர்களிடமிருந்து மண்டபம் மீட்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் பாம்புகளே வந்து வணங்கியதாகக் கருதப்படும் பிரசித்தி பெற்ற பணாமுடீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் ராஜகோபுரத்தை ஒட்டி இருக்கும் பழமையான கருங்கல் மண்டபத்தை சமூக விரோதிகள் சிலர் ஆக்கிரமித்து கட்டிடம் எழுப்ப முயன்றுள்ளனர். ஊரடங்கு காலம் என்பதால் யாருக்கும் தெரியாது என்ற தைரியத்தில் அறநிலையத் துறை அதிகாரிகள் பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஆக்கிரமிப்பை அனுமதித்தாகக் கூறப்படுகிறது.
எனினும் அப்பகுதி இந்துக்களும் இந்து முன்னணியும் விழிப்புடன் இருந்ததால் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு அறநிலையத் துறையிடம் முறையிட்டுள்ளனர். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டத்தில் இறங்குவோம் என்று எச்சரித்த நிலையில், அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றியுள்ளனர். இதே போன்று பல கோவில்களில் கருங்கல் மண்டபங்கள் சத்தமில்லாமல் ஊழல் அதிகாரிகளால் விற்கப்படுவதாகவும் அவற்றை மீட்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
சென்ற வருடம் இதே கோவிலுக்கு சொந்தமான ₹1.75 கோடி மதிப்புள்ள நிலத்தை தனியார் ஆக்கிரமித்து இருப்பதாக அறநிலையத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்ததில் ஓரிக்கையில் உள்ள மின்வாரிய துணை மின் நிலையத்துக்குப் பின்புறத்தில் உள்ள 6976 சதுர அடி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது தெரிய வந்தது.
பின்னர் அறநிலையத் துறை அதிகாரிகள் ஜெ.சி.பி இயந்திரத்தின் மூலம் சுற்றுச்சுவர்களை இடித்து கோயிலுக்குச் சொந்தமான இடம் எனப் பெயர்ப்பலகையும் வைத்து விட்டுத் திரும்பினர். மக்கள் புகார் அளித்த பின் நடவடிக்கை எடுப்பதை விட்டு பல ஆயிரம் கோடிகள் மதிப்புள்ள கோவில் சொத்துக்களை அறநிலையத் துறையே அக்கறை எடுத்து ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் என்று பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
Source: Hindu Munnani & Dinamani