கொரோனா காலத்திலும் அசராத அறநிலையத் துறை - கோவில் நிலத்தை சட்டவிரோதமாக ஏலம் விட முயற்சி..!
தர்மபுரி மாவட்டம் மாரியம்மன் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டுமானம் கட்டுவதையும் சட்டவிரோதமாக ஏலம் விடுவதையும் நிறுத்தி சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிக தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மோரவள்ளியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாகவும் அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கோயிலுக்கு சொந்தமாக 2.76 ஹெக்டேர் நிலம் உள்ளது என்றும் இதை தனி நபர்கள் பலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.
நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி வருவதோடு கொரோனா காலத்தில் பல அரசுப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையிலும் கோவில் சொத்துக்களை ஏலம் விடுவதற்கான முயற்சி நடந்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டி இருக்கிறார். இது தொடர்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு அறநிலைய துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த சேகர், முனுசாமி, திருப்பதி ஆகியோர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து இருப்பதாகவும் ஆனால் அறநிலையத்துறை சொத்துக்களை அவர்களிடம் இருந்து மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் முறைகேட்டை அம்பலப்படுத்தியதால் தனக்கு மிரட்டல் விடுக்கின்றனர் என்றும் கோவில் நிலத்தை மீட்க ஆர்வம் காட்டாத அறநிலையத்துறை அதை அபகரிக்க முயற்சிப்போருக்கே ஆதரவாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
ஆக்கிரமிப்பாளர்கள் கோவில் நிலத்தில் கட்டிடம் கட்டி வருவதாகவும் அறநிலையத்துறை சொத்துக்களை சட்டவிரோதமாக ஏலம் விட முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ள ராதாகிருஷ்ணன், நிலத்தை மீட்டு பாதுகாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்று மனுவில் கோரியுள்ளார். ஏல நடவடிக்கையை நிறுத்தி வைத்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கட்டுமான பணிகளை தொடரக்கூடாது என்றும் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் இது குறித்து அறிக்கை அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Source: Hindu Tamil