திடீரென குவைத் சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் - ஏன்?

Update: 2021-06-13 12:20 GMT

குவைத் நாட்டுக்கு அரசுமுறைப் பயணமாக வருகை புரிந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் S. ஜெய்சங்கர் மற்றும் அவருடன் வந்த குழுவினருக்கு விமான நிலையத்தில் மிகவும் உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்வில், குவைத் நாட்டின் வெளியுறவுத்துறை துணை தலைவர் பொறுப்பை வகிக்கும் அப்துல் ரசாக் அல் கலீபா, குவைத் நாட்டுக்கான இந்திய தூதர் ஜார்ஜ், இந்தியாவுக்கான குவைத் நாட்டின் தூதர் ஜாசிம் அல் நஜ்ஜம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இந்த ஆண்டு இந்தியா மற்றும் குவைத் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவின் 60ஆம் ஆண்டு நிறைவு ஆகும். சுமார் 60 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவு நீடித்து வருகிறது. மேலும் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலும் இந்த உறவு சிறப்பாக இருந்து வருகிறது. குவைத் நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் பேர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு குவைத் அரசு சிறப்பான ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. குறிப்பாக குவைத் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் சிறப்பான வர்த்தக ஒத்துழைப்பு நீடித்து வருகிறது. 


குவைத் நாட்டில் இருந்து இந்திய அரசு கச்சா எண்ணெயை அதிகமாக இறக்குமதி செய்து வருகிறது. அதேபோல் இந்தியாவில் இருந்து உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஆக்சிஜன் தேவை அதிகரித்தது. இதற்கு குவைத் அரசும், குவைத் நாட்டில் வசித்து வரும் இந்தியர்களும் தேவையான உதவிகளை வழங்கியதும் குறிப்பிடத்தக்கதும். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் குவைத் வருகையின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு பல்வேறு வழிகளில் அதிகரிக்க உதவியாக இருக்கும் என்பதும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாகும்.

Similar News