பாதிரியார் மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு எதிராக போராடிய சிஸ்டர் கான்வென்டை விட்டு விரட்டியடிப்பு!

Update: 2021-06-15 14:34 GMT

கேரளாவில் சீரோ மலபார் சபையில் ஜலந்தர் பிஷப்பாக இருந்த பிராங்கோ முலக்கல் மீது கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஆண்டு பாலியல் புகார் தெரிவித்தார். ஆனால் அந்த பாலியல் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிஷப் பிராங்கோ முலக்கலுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற கன்னியாஸ்திரி லூசி கலப்புராவை, கான்வென்டை விட்டு வெளியேறுமாறு பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபை உத்தரவிட்டுள்ளது. 

 'கேரளாவில் உள்ள கான்வென்டில் தன்னை 2014 முதல் 2016 வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்' என, கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஆண்டு பிராங்கோ முலக்கல் மீது புகார் தெரிவித்தார். இது பெரும் பூதாகரமாக வெடித்தாலும்,  பிராங்கோ முலக்கல் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அவரை கைது செய்யக் கோரி கொச்சியில் கன்னியாஸ்திரிகள் தொடர் போராட்டம் நடத்தினர். வாடிகனுக்கும் புகார் அனுப்பிய நிலையில், பிராங்கோ தனது பிஷப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார். பிறகு அவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார்.


இந்த வழக்கில் அவருக்கு எதிராக சாட்சி சொன்ன பாதிரியார் குரியகோஸ் கட்டுத்தாரா மர்மமான முறையில் இறந்தார். இதனை தொடர்ந்து பிராங்கோவுக்கு எதிராக 2019 ஆம் ஆண்டின் துவக்கத்தில் திருச்சபையிலும் போராட்டம் வெடித்தது. போராட்டத்தை முன்னின்று நடத்திய அனுபமா என்ற கன்னியாஸ்திரியை இடமாற்றம் செய்தது சபை. போராட்டக் களத்தில் உடனிருந்த கன்னியாஸ்திரி லூசி களப்புராவை 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சபையை விட்டே நீக்கியது. இந்நிலையில் சபையில் தனக்கு நடந்ததை குறித்து  'கர்த்தாவின்டே நாமத்தில்' என்ற பெயரில் புத்தகம் ஆக்கியுள்ளார் லூசி.


இந்நிலையில் நேற்று, லூசி கலப்புராவிற்கு பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபை அனுப்பியிருக்கும் கடிதத்தில் "உங்கள் பதவி நீக்கத்தை எதிர்த்து முறையீடு செய்யக் கத்தோலிக்க சபைக்குள் எந்த சட்ட வழிகளும் இனி இல்லை. எப்.சி.சி யின் உறுப்பினராக நீங்கள் தொடர்வதற்கான உரிமை உறுதியாவும் திரும்பப் பெற முடியாத வகையிலும் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் இனி நீங்கள் பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையின் கான்வென்ட்களில் தங்குவது சட்ட விரோதமானது" என்று அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News