அஸ்வத்தாமனின் அலுவலகம் எரிக்கப்பட்ட விவகாரத்தில் புலன் விசாரணை தேவை - தீயணைப்புத்துறை!

Update: 2021-06-17 12:19 GMT

கடந்த ஜூன் 14 அன்று பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அஸ்வத்தாமன் அலுவலகம் தீயில் எரிந்தது தெரிய வந்தது. ஏதோ ஒரு வகையான ரசாயனத்தை பயன்படுத்தி தீ வைக்கப்பட்டதே போல் தெரிவதாக காவல் நிலையத்தில் பாஜக சார்பாக புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தீயணைப்பு துறையினர் அலுவலகத்தை சோதனை செய்து அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அந்த அறிக்கையில் ஜன்னல் அருகில் கிடந்த மர்ம பொருள் தான் தீ பிடித்ததற்கு காரணம் என்றும் மின் கசிவு காரணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காவல் துறையினர் இது குறித்து புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தீயணைப்புத் துறை சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தீயணைப்புத் துறை அனுப்பியுள்ள ஆய்வறிக்கையில் "மேற்கு பக்க ஜன்னலருகே மின்சாதன மோட்டார் போன்ற ஒரு பொருள் எரிந்த நிலையில் காணப்பட்டது. அதன் அருகில் எலக்ட்ரிக்கல் ஸ்விட்ச், மேசை, நாற்காலி மற்றும் குளிர்சாதன பெட்டி எதுவும் தீ விபத்துக்கு உட்படாமல் நல்ல நிலையில் உள்ளது. தீ விபத்துக்குள்ளான அறையின் மேற்கு பக்க ஜன்னல் அருகே மின் சாதன மோட்டார் போன்ற பொருள் எரிந்து கருகிய நிலையில் காணப்படுவதால் தீ விபத்திற்கான காரணத்தை அறிய காவல்துறை புலனாய்வு செய்யுமாறு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டு இருந்தது.

மர்ம நபர்கள் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வரும் நிலையில் தற்போது அஸ்வத்தாமன் அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே காவல்துறையினர் முறையான விசாரணை மேற்கொண்டு தீ விபத்துக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் அஸ்வத்தாமன் அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

Similar News