பிரான்ஸில் இனி முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை : பிரதமரின் திடீர் அறிவிப்பு.!
உலக நாடுகள் பலவற்றில் வெவ்வேறு திட்டமாக உருமாறி வரும் கொரோனாவை வெல்வதற்கு ஒரே வழி முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மற்றும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது போன்ற விஷயங்கள் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால் சில நாடுகளில் தற்போது இருக்கும் நோயின் தாக்கம் குறையும் சூழ்நிலையில் அவர்கள் தங்களுடைய சூழ்நிலைக்கேற்ப ஏற்ப, பாதிப்புகளுக்கு ஏற்ப சில தளர்வுகள் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்பொழுது பிரான்ஸில் நாளையில் இருந்து வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிவது கட்டாயம் அல்ல என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
பிரான்ஸ் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இந்த மாதம் கடைசி வரை ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது. ஆனால் கொரோனா தடுப்பூசி அதிகமாக செலுத்தப்பட்டு வரும் நிலையிலும், கொரோனா தொற்று குறைந்து வரும் காரணத்தினாலும் 10 நாட்களுக்கு முன்னதாகவே, அதாவது ஜூன் 20-ந்தேதியில் இருந்து கொரோனா ஊரடங்கு தளர்த்தப்படும் என பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், நாளையில் இருந்து வெளியில் செல்பவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணி வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் முன்பு எதிர்பார்த்ததைவிட தற்போது நாட்டில் உள்ள சுகாதார நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது. எனவே தற்போதுள்ள தளர்வுகள் மக்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும்" என்று காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார். பிரான்ஸில் நேற்றைய கொரோனா தினசரி பாதிப்பு 3200 ஆக இருந்தது. பிரான்சில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு குறைவான பதிவு இதுவாகும். இதனால் பிரான்ஸ் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.