சேலத்தில் தலித் பிஷப்பை நியமிக்காவிட்டால் தீண்டாமை சட்டம் பாயும் - எச்சரிக்கும் தலித் கிறிஸ்தவர்கள்!

Update: 2021-06-19 05:22 GMT

தலித் கிறிஸ்தவர்கள் அதிகமாக இருக்கும் பகுதியில் தலித் அல்லாதவர்களை பிஷப்பாக நியமிக்கக் கூடாது என்று கோரிக்கை எழுந்து வந்த நிலையில் தற்போது இது தொடர்பாக புதிய பேராயர் லியோபோல்டோ கிரெல்லிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

சமீபத்தில் தலித் கிறிஸ்தவர்கள் அதிகமாக வசித்து வரும் சேலத்தில் தலித் அல்லாத ஒருவர் பிஷப்பாக நியமிக்கப்படுவதற்கு எதிராக தலித் கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து இந்தியாவின் புதிய பேராயராக பொறுப்பேற்ற லியோபோல்டோ கிரெல்லிக்கு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.


தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்கத்தின் தலைவர் மேரி ஜான் எழுதியுள்ள கடிதத்தில், "சேலத்தில் சமீபத்தில் தலித் அல்லாத பிஷப்பை நியமித்ததற்கு தலித் பிரிவைச் சேர்ந்தவரை பிஷபாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்று சாதிய பாகுபாடுகள் தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

பாண்டிச்சேரி-கடலூர், குழித்துறை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி மறைமாவட்டங்களில் தலித் பேராயரை நியமிப்பது குறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் இந்தியா முழுவதும்‌ தலித் கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தலித் பிஷப்பை நியமித்து தலித் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தலித் கத்தோலிக்கர்கள் முறையாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக ஆயர்கள், பேராயர்கள் மற்றும் கார்டினல்களைத் தேர்ந்தெடுப்பதற்கான இந்தியாவின் பாரம்பரிய முறையைத் திருத்தி அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை கடந்த முப்பது ஆண்டுகளாக முன்வைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்திய அரசியல் அமைப்பின்படி தீண்டாமை மற்றும் தலித்துகளுக்கு எதிரான சாதி பாகுபாடு ஆகியவற்றை கடைப்பிடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த கடிதத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News