மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த உதவித் தொகை அளிக்கும் சாஸ்திரா பல்கலைக்கழகம்!
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு 1000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் இதனால் நாடு முழுவதும் உள்ள சாஸ்த்ரா கல்லூரி மாணவர்கள் தங்கள் தடுப்பூசி செலவை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று இந்திய அளவிலும் தமிழக அளவிலும் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. தோற்று குறைந்தால் தான் கல்லூரிகளும் பள்ளிகளும் திறக்கப்படும் வாய்ப்பு ஏற்படும் என்ற சூழல் நிலவும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கல்வி நிறுவனங்கள் திறக்கப்படுவதை சாத்தியமாகும்.
இதை செயல்படுத்த உதவும் வகையில் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக் கழகம் சார்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. 2021-22 கல்வி ஆண்டில் மாணவர்கள் கல்லூரிக்கு வர ஏதுவாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்காக இந்த நிதி உதவி வழங்கப்படுவதாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.வைத்திய சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த நிதி உதவியின் மூலம் தங்களது தடுப்பூசி செலவை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார். மேலும் அரசு கல்லூரிகளை திறக்க உத்தரவிட்ட பிறகு மாணவர்கள் கல்லூரிக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருவதற்கு வழிவகை செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேபோல் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சாஸ்த்ரா பல்கலைக் கழக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பல்கலைக்கழகம் சார்பாக இலவச தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசி முகாம் மூலம் 600க்கும் மேற்பட்டவர்கள் பயன் அடைந்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.