'கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர்களை ஆண்டவன் தண்டிப்பான்' - அமைச்சர் சேகர்பாபு!

Update: 2021-06-21 07:19 GMT

கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளவர்களை ஆண்டவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான் நிச்சயம் தண்டனை வழங்குவான் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் கௌரி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 120 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த ஆக்கிரமிப்பில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவரின் உறவினர்தான் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் கோவில் நிலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கோவிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை மீட்ட அதிகாரிகள் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட இடத்தை இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மீட்கப்பட்ட கோவில் நிலத்தில் சரவணன் என்பவரது பெயரில் மின் இணைப்பு பெறப் பட்டுள்ளதாகவும், அரசு பதிவேட்டில் திருத்தங்கள் செய்து கோவில் நிலத்திற்கு பட்டா பெறப்பட்டு உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும் இந்த விநாயகர் கோவிலுக்கு சொந்தமான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து படிப்படியாக மீட்கப்பட்டு ஆக்கிரமிப்பாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

உணர்ச்சிவசப்பட்ட அமைச்சர், "கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களை ஆண்டவன் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். தண்டனை வழங்குவான்" என்று தெரிவித்தது அங்கிருந்தவர்களை சங்கடத்தில் நெளிய வைத்தது. கடந்த வருடம் திமுக எம்எல்ஏ இதயச்சந்திரன் கோவில் நில ஆக்கிரமிப்பு பிரச்சனையின் போது துப்பாக்கி சூடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக பிரமுகர்களும் கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பது அதிகரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் நிலையில் அமைச்சர் இவ்வாறு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளவர்கள் தங்கள் தவறை உணர்ந்து கொண்டு விரைவில் கோவில் நிலத்தை கோவிலுடன் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளது உண்மை என்றால் அது குறித்து அவர் பட்டியல் வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கத் தயார் என்றும் இந்து அறநிலைத்யதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Source : Dinamalar

Similar News