இடித்து தரைமட்டமாக்கப்பட்ட பழமையான கோவில் - அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள்!

Update: 2021-06-21 12:32 GMT

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பழமையான ஆஞ்சநேயர் கோவில் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த பொதுமக்கள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி, சேவூர் ஊராட்சி, கிளாகுளம் கிராமத்தில், பழமையான ஆஞ்சநேயர் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலின் மேற்கூரை கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் அந்த கோவிலில் இருந்த பழமையான ஆஞ்சநேயர் சிலையும் சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த கற் தூண்களும் கோவிலுக்கு வெளியே வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்துள்ளன. தற்போது இந்த கோவில் முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் பழமையான கோவில் இடிக்கப்பட்டு உள்ளதால் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பழமையான கோவில் என்பதால் புனரமைக்கும் பணிக்காக இந்தக் கோவில் இடிக்கப்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காக கோவில் இடிக்கப்பட்டதா என்று தாசில்தார் தலைமையில் விசாரணை நடைபெற உள்ளது. விசாரணை செய்த பின்னரே கோவில் இடிக்கப்பட்டதற்கான காரணங்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் நாட்டில் இது போன்ற பழமையான கோவில்களை குறிவைத்து சிலர் ஆக்கிரமிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் கோவில் இருந்த இடத்தில் கட்டுமானத்தை மேற்கொண்டு போலியான ஆவணங்கள் மூலம் பட்டா பெற்று கோவில் இருந்த இடம் தெரியாமல் செய்து விடுகின்றனர். எனவே அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தி கோவிலை இடித்த அவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Source : Dinamalar

Similar News