நெல்லை மாவட்டத்தில் முருகன் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த சில கிறிஸ்தவ மிஷனரிகள் அங்கு தேவாலயம் கட்டும் பணிகளை மேற்கொண்டு வருவதை தொடர்ந்து தேவாலயம் கட்டும் பணியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கிறிஸ்தவ தேவாலயம் கட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் தற்போது முருகன் கோவில் நிலத்தில் மீண்டும் தேவாலயம் கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் உரிய அனுமதி பெறாமல் பணிகள் நடப்பதை கண்டுகொள்ளாத வள்ளியூர் நகர பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து பஞ்சாயத்து அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்த மாநில பொது செயலாளர் அரசு ராஜா தலைமை தாங்கினார். துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், செயலாளர் குற்றாலநாதன், கோட்ட தலைவர் தங்கமனோகர், வக்கீல் மதுசூதனன், மாவட்ட பொருளாளர் பரமசிவன், பா.ஜ.க மாவட்ட தலைவர் குமார முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மண்டல துணை தாசில்தார், நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் கிறிஸ்டோபர் தாஸ் மற்றும் வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
#வள்ளியூர் #கிறிஸ்தவ#மதமாற்றம்#CSI#இந்துமுன்னணி pic.twitter.com/GxB8LQgR4K
— Hindu Munnani (@hindumunnaniorg) June 19, 2021
அப்போது தேவாலயம் கட்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் இந்து முன்னணியினர் மனு அளித்தனர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை எடுத்து இந்து முன்னணியினர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு தேவாலயம் கட்ட முயற்சி நடைபெற்று வருவதை தொடர்ந்து இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தியதால் பஞ்சாயத்து அலுவலகத்தில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Source : Dinathanthi