நம் சமையலறையில் நாம் உப்பு என்ற ஒன்றை பாரம்பரியமாக பயன்படுத்திக்கொண்டே தான் இருக்கிறோம். ஆனால் சமீப காலமாக அயோடின் உப்பு தான் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். அதற்கான காரணத்தை இப்போது நாம் தெரிந்து கொள்ள வேண்டும். கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பியால் உற்பத்தி செய்யப்படும் தைராய்டு ஹார்மோன்கள் தான் ஒரு மனிதன் கருவாய் உருவான நாள் முதல் வாழ்வின் இறுதி நாள் வரை, தலை முதல் கால் வரை அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தைராய்டு சுரப்பி பட்டாம்பூச்சி வடிவிலானது.
இந்த சுரப்பிகள் மிகவும் சீராக்கவும், வேகமாகவும் செயல்பட அயோடின் தான் மிக முக்கியமான தேவை என அறிவியல் கூறுகிறது. நம் உடலுக்கு ஒரு கேடயமாக செயல்படுவதும் இந்த தைராய்டு சுரப்பி தான். உண்மையில் தைராய்டு என்பதற்கு கேடயம் என்பது தான் பொருள். தைராக்ஸின் ஹார்மோன் உற்பத்திக்கு தைராய்டு சுரப்பிக்கு அயோடின் தேவைப்படுகிறது. இந்த ஹார்மோன் நம் உடலில் உள்ள கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் ஆகியவற்றின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. உணவில் அயோடினின் அளவு தேவைப்படுவதை விட குறைவாக இருந்தால், தைராய்டு சுரப்பி விரிவடைவதால் கழுத்து வீக்கமடைந்து பல பிரச்சினைகள் ஏற்படும். இதனால் தைராய்டு சுரப்பி சீராக செயல்பட அயோடின் சேர்க்கப்பட்ட உப்பை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்.
அயோடின் ஒரு கனமான கனிமம் என்பதால் இது பூமியின் மேல் அடுக்கில் குறைவாகவே காணப்படும். அதுவும் இல்லாமல் நாம் உண்ணும் காய்கறிகளில் கூட இது மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும், சர்க்கரையை விட உப்பு மிக மலிவானது மற்றும் சிறந்தது என்பதால், உடலில் அயோடினைச் சேர்க்க உப்பு தேர்ந்தெடுக்கப்படுகிறது. அயோடினை உடலில் சேர்க்க உப்பு தேர்ந்தெடுக்கபட்டத்தை அடுத்து, பொட்டாசியம் அயோடைடு, சோடியம் அயோடைடு, பொட்டாசியம் அயோடேட், மற்றும் சோடியம் அயோடேட் ஆகிய நான்கு அயோடின்கள் தனித்தனியாக அல்லது ஒன்றாக உப்புடன் சேர்க்கப்படுகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது.