'ஜெய்ஹிந்த் வார்த்தை நீக்கப்பட்டதால் தமிழகம் தலைநிமிர்ந்து விட்டது'- தி.மு.க கூட்டணி எம்.எல்.ஏ-வின் பிரிவினைவாத பேச்சு!
ஆளுநர் உரையில் 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தை நீக்கப்பட்டதால் தமிழகம் தலைநிமிர்ந்து விட்டது என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கொங்குநாடு கட்சி எம்எல்ஏ ஈஸ்வரன் சட்டசபையில் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய சுதந்திர போராட்டத்தின் போது அனைத்து இந்தியர்களையும் ஒன்றிணைப்பதற்காக ஜெய்ஹிந்த் கோஷம் நாடு முழுவதும் எழுப்பப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருமே ஜெய்ஹிந்த் என்ற கோஷத்தை தங்களது போராட்டத்தின்போது எழுப்பியுள்ளனர். இந்த கோஷத்தை உருவாக்கியதே செண்பகராமன் பிள்ளை என்ற தமிழர் தான். இப்பேர்பட்ட ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை ஆளுநர் உரையில் இருந்து நீக்கி விட்டதால் தமிழகம் தலை நிமிர தொடங்கிவிட்டது என்று மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ ஒருவர் தெரிவித்ததற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் 16 வது சட்டமன்றத்தின் முதல் அமர்வு ஜூன் 21 அன்று சென்னையில் உள்ள கலைவனார் அரங்கத்தில் தொடங்கியது. சட்டமன்றத்தில் ஆளுநர் பன்வரிலால் புரோஹித் உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து எம்எல்ஏக்கள் சட்டசபையில் பேச அனுமதிக்கப்பட்டனர்.
முதல் அமர்வின் இறுதி நாளில் சட்டசபையில் பேசிய திருச்செங்கோடு தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஈஸ்வரன் "ஆளுநர் உரையை படித்த உடனே தமிழகம் தலை நிமிர்ந்து விட்டது என்று ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், சென்ற ஆளுநர் உரையில் நான் பார்த்தேன் கடைசியில் நன்றி, வணக்கம், ஜெய் ஹிந்த் என்று போட்டிருக்கிறது. ஆனால் இந்த ஆளுநர் உரையில் அந்த ஜெய்ஹிந்த் இல்லை என்பதை இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்" என்று கூறினார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்ணல் அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எந்த இடத்திலும் ஒன்றிய அரசு என்று குறிப்பிடாத நிலையில் திமுக மத்திய அரசை தொடர்ந்து ஒன்றிய அரசு என்று அழைத்து வருகிறது. இதனை அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பிலிருக்கும் முதல்வரும் ஆதரித்து இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுதந்திர போராட்டத்தின் போது முழங்கப்பட்ட ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை நீக்கி விட்டதால் தமிழகம் தலை நிமிர்ந்து விட்டது என்று திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏ ஒருவர் பேசியுள்ளது அரசியல் கட்சி தலைவர்களிடையே எதிர்ப்பை சந்தித்துள்ளது.